நேபாள் அணியின் முன்னாள் கேப்டனும் லெக் ஸ்பின்னருமான சந்தீப் லாமிச்சானே, கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காத்மாண்டுவில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து 17 வயது மைனர் பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார். வழக்கு நடைபெற்ற நிலையிலும், ஜனவரி மாதம் நேபாள உச்சநீதிமன்றம் சந்தீப்பின் காவலை தளர்த்தியதால் அவர் நேபாள் அணியில் தொடர்ந்து விளையாடினார்.
இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி மீண்டும் வழக்கு மறுவிசாரணைக்கு வந்த நிலையில், காத்மண்டு மாவட்ட நீதிமன்றம், சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. மேலும் தண்டனை தொடர்பான விவரத்தை, ஜனவரி மாத தொடக்கத்தில் தெரிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 10ஆம் தேதி தண்டனை தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்பட்டது. அப்போது, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்டவருக்கு 2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கியது. சந்தீப் லாமிச்சானேவுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டதையடுத்து, நேபாள கிரிக்கெட் வாரியமும் அவரை இடைநீக்கம் செய்தது. மேலும், அவரும் கைது செய்யப்பட்டார்.
அதேநேரத்தில், இத்தண்டனையை எதிர்த்து லாமிச்சானே தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சந்தீப் லாமிச்சானேவை நேபாள உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதையடுத்து ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேபாள அணியின் சார்பில் சந்தீப் லாமிச்சானேவும் இடம்பிடித்துள்ளார்.
இதையும் படிக்க: சச்சின் டெண்டுல்கரின் காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு விபரீத முடிவு!