மீண்டும் ட்ரம்புக்கு ஆதரவு.. பணத்தை வாரிக் கொட்டிய எலான் மஸ்க்.. பின்னணி என்ன?
அமெரிக்க இடைத்தேர்தலையொட்டி அதிபர் ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சிக்கு உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், கோடீஸ்வர தொழிலதிபருமான எலான் மஸ்க் பெருமளவு நிதியுதவி செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சியைச் சார்ந்த அமைப்புகளுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் கடந்த மூன்று மாதங்களில் (ஜூலை முதல்) சுமார் 276 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் தோராயமாக ₹2,400 கோடி முதல் ₹3,250 கோடி வரை) நிதியுதவி அளித்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடப்பு தேர்தல் சுழற்சி முழுவதையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மஸ்க்கின் மொத்த அரசியல் பங்களிப்பு சுமார் 366 மில்லியன் டாலர்களைத் தொட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு இடைத்தேர்தல் களத்தில் அதிக நிதி வழங்கிய தனிநபர் நன்கொடையாளராக அவர் உருவெடுத்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் ஆளும் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் இழுபறி நிலவுகிறது. சபாநாயகர் மைக் ஜான்சன் மற்றும் செனட் தலைவர்களின் தேர்தல் களத்தை வலுப்படுத்தவே இந்தத் தொகை குவிக்கப்படுகிறது. மறுபுறம், ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்திற்கு அரசு வழங்கிவரும் ஒப்பந்தங்கள், பாதுகாப்புத் துறை திட்டங்கள் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அரசுத் திறன் சீர்திருத்தங்கள் ஆகியவற்றில் எதிர்கட்சியினரின் அழுத்தங்களைத் தணிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சியின் பலம் நீடிப்பது மஸ்க்கிற்கு முக்கியமாகக் கருதப்படுகிறது.
முன்னதாக, கடந்த 2024 அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற உதவுவதற்காக, தேர்தல் பிரசாரத்தின்போது கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியிருந்தார் எலான் மஸ்க். இந்த நிதி, ஆதரவு அவரை ஜனநாயகக் கட்சியினரின் முக்கிய இலக்காக மாற்றியதுடன், அதிபர் ட்ரம்பின் அரசாங்கத்தின் செலவுகளைக் குறைக்கும் திட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.
பின்னர், ட்ரம்பின் தனித்துவமான வரி மற்றும் உள்நாட்டுக் கொள்கைச் சட்டம் தொடர்பாக இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது, எதிர்காலத்தில் அரசியல் செலவினங்களை மிகவும் குறைத்துக் கொள்வேன் எனத் தெரிவித்தார். ஆனால், அதன் பிறகு அவர்களின் உறவு மேம்பட்டதாகத் தெரிகிறது, மேலும் கடந்த வாரம் ட்ரம்ப், மஸ்க்கிற்கு தேசிய அறிவியல் பதக்கத்தை வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

