இந்தியாவுக்கு வழங்கப்பட்ட 182 கோடி நிதி.. திடீரென ரத்து செய்த எலான் மஸ்க்!
அமெரிக்காவில் புதிதாக அமைந்த ட்ரம்ப் அரசின்கீழ் செயல்படும் DOGE அமைப்பின் தலைவராக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க் உள்ளார். அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. இதன்மூலம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் எலான் மஸ்க்கிற்கு எதிராக அந்நாட்டில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மறுபுறம், பிற நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் அத்துறை ரத்து செய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 21 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.182 கோடி) நிதியுதவியை, அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (DOGE) ரத்து செய்துள்ளது. இதுதொடா்பாக அந்தத் துறை, ’பல நாடுகளுக்குப் பல்வேறு பணிகளுக்காக அமெரிக்க மக்களின் வரிப் பணம் செலவிடப்பட இருந்த நிலையில், அந்தச் செலவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தச் செலவுகளில் இந்திய தோ்தல்களில் வாக்குப் பதிவு விகிதத்தை அதிகரிப்பதற்கு, இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கத் திட்டமிட்ட 21 மில்லியன் டாலா் நிதியுதவியும் அடங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல மொசாம்பிக், கம்போடியா, சொ்பியா, நேபாளம், வங்கதேசம், மால்டோவா உள்ளிட்ட நாடுகளுக்கு அளிக்க திட்டமிடப்பட்டிருந்த நிதியுதவியையும் டிஓஜிஇ ரத்து செய்துள்ளது. அமெரிக்க அரசு நிா்வாகத்தை மேம்படுத்தி, வீண் செலவுகள் குறைக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு டிஓஜிஇ செயல்படும் நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.