பராக் ஒபாமா To முகேஷ் அம்பானி | ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் யார், யார் பங்கேற்பு.. ஒரு பார்வை!
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நாளை (ஜன.20) பதவியேற்க உள்ளார். அவர், நாளை இரவு இந்திய நேரப்படி 10.30 மணிக்குப் பதவியேற்க உள்ளார். தலைநகர் வாஷிங்டன் டிசியில் உள்ள நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதால், அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்துக்குள் பதவியேற்பு விழா ஏன்?
அதிபர் பதவியேற்பு விழா வழக்கமாக அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அருகே பொதுவெளியில் நடத்தப்படும் நிலையில், இந்த முறை கடும் குளிர் காரணமாக நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்படவுள்ளது. வாஷிங்டனில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்து வருகின்றனர். 2,50,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதவியேற்பு விழாவில் யார், யார் பங்கேற்பு?
ட்ரம்ப் பதவியேற்பு விழாவில், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யூ புஷ், பில் கிளிண்டன், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இவர்களைத் தவிர அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரான்ஸ் அரசியல்வாதி எரிக் ஜெம்மூர், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் நைகல் ஃபரேஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், கோடீஸ்வரர் எலோன் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மற்றும் ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொள்கிறார். தவிர தொழிலதிபர் முகேஷ் அம்பானியும் தன் குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்றுள்ளார்.
பதவியேற்பு விழாவில் உறுதிமொழி!
இதற்கிடையே, பதவியேற்பு விழாவிற்காக, புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது விடுதியில் இருந்து, வாஷிங்டன் டிசிக்கு ட்ரம்ப் புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக தனி விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் ட்ரம்ப், அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான ஜெட் விமானத்தில் தனது குடும்பத்துடன் புறப்பட்டார். பதவியேற்பு விழாவில் ட்ரம்ப், மறைந்த தனது தாய் தனக்கு கொடுத்த பைபிள் மற்றும் மறைந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிள் ஆகியவற்றின் மீது உறுதிமொழி எடுக்க உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்க அதிபராகப் பதவியேற்றபோதும், லிங்கன் பதவியேற்ற (1861ஆம் ஆண்டு) பைபிளைக் கொண்டு ட்ரம்ப் பதவியேற்றிருந்தார். முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, கடந்த 2009 மற்றும் 2013 ஆகிய இருமுறை அதிபராகப் பொறுப்பேற்றபோதும் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி உறுதிமொழி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளில் எந்த உத்தரவுகளில் கையெழுத்திடுவார்?
ட்ரம்ப் பதவியேற்றதும் தனது முதல் நாளில் எந்த உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்ற அமெரிக்கா முழுவதும் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, குடியேற்றம் தொடர்பாக புதிய உத்தரவு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. காரணம், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு எதிராக, மிகப்பெரிய கைது நடவடிக்கை நடைபெறவுள்ளதாக, ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய எல்லை அதிகாரி கூறியுள்ளார்.
புதிய எல்லைஅதிகாரியாக பதவியேற்கவுள்ள டாம் ஹோமன், ”ட்ரம்ப் பதவியேற்ற மறுநாள் முதல், அமெரிக்கா முழுவதும் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை கண்டறிய மிகப்பெரிய சோதனை நடைபெறவுள்ளது” எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, ட்ரம்பின் பதவியேற்பு நிதி வசூல், புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி வரை டாலர் 170 மில்லியன் திரட்டியுள்ளது. இது, நாளைக்குள் டாலர் 200 மில்லியனைத் தொடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.