”பதவியேற்பதற்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்..” - ஹமாஸுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னை நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது. இதில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹமாஸ் அமைப்பினர் போராடி வருகின்றனர். 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது.
லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டியது. எனினும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையிலும் ஒப்பந்தம் எட்டுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை உடனடியாக மீட்கக் கோரி அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல் அவிவ் நகரில் கூடிய அவர்கள், இஸ்ரேல் அரசு, ஹமாஸ் அமைப்புடன் போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும், பிணைக் கைதிகளை மீட்க வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும் பிணைக் கைதிகளாக உள்ள தங்களது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் புகைப்படங்களை கையில் ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர்.
முன்னதாக, ”நான் பதவியேற்பதற்குள் ஹமாஸ் அமைப்பு தன்னிடம் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்” என அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அவர் பதவியேற்க இன்னும் 12 நாட்களே உள்ளது.
இதுகுறித்து அவர், ”இது ஹமாஸுக்கு நல்லதல்ல. 2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்கக் கூடாது என்று நான் இனி சொல்ல வேண்டியதில்லை. ஆனால், 20ஆம் தேதி நான் பதவியேற்கும் முன் ஹமாஸ் பணயக் கைதிகளை விடுதலை செய்யவேண்டும்.
பணயக்கைதிகளை விடுவிப்பதில் ஏன் தாமதம் போன்ற பேச்சுகளுக்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால் பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் மத்திய கிழக்கில் நரகம் வெடிக்கும்” என எச்சரித்துள்ளார்.
போர் நிறுத்தத்திற்கு இடையே ட்ரம்பின் இந்த எச்சரிக்கை, உலக நாடுகளை மேலும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. காரணம், அவர் தனது பிரசாரத்தின்போது போர் நிறுத்தத்திற்கு முடிவு கட்டுவதாகத் தெரிவித்திருந்தார். முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்திலும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். ட்ரம்பின் இந்த எச்சரிக்கையை, இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் அப்போது வரவேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.