கோல்டு கார்டு விசா.. அறிமுகம் செய்த ட்ரம்ப்.. இந்தியர்களுக்கு சாதகமா? பயன்கள் என்ன?
H1B விசா கெடுபிடிகளுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்மூலம், வெளிநாட்டு மாணவர்களைத் தக்க வைக்கமுடியும் என அவர் நம்புகிறார்.
அமெரிக்காவுக்குச் சென்று வேலை பார்ப்பது பலருடைய கனவாக இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு பலருக்கும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் இரண்டாவது முறை பதவியேற்ற ட்ரம்ப், அந்தக் கனவுகளுக்கு எல்லாம் கிட்டத்தட்ட முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசாக் கட்டணத்தைப் பன்மடங்கு உயர்த்தியுள்ளார். தவிர, அதுதொடர்பான விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரக்கூடியவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதனால், தற்போது இந்திய விண்ணப்பங்களுக்கான நேர்காணல்கள்கூட அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் பெருமளவில் பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், அதிபர் ட்ரம்ப் தற்போது ஒரு புதிய ’கோல்ட் கார்டு’ திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். “இது, திறமையான சர்வதேச மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்தவுடன் அமெரிக்காவைவிட்டு வெளியேற கட்டாயப்படுத்தும் அபத்தமான குடியேற்ற முறையை சரிசெய்ய உதவும். சிறந்த திறமையாளர்களுக்கு கல்வி கற்பித்து, பட்டம் பெற்ற உடனேயே அவர்களை அனுப்பிவைப்பது நாட்டிற்கு அர்த்தமற்றது. இந்த மாணவர்கள் பெரும்பாலும் மிக உயர்ந்த மட்டத்தில் செயல்படுகிறார்கள், ஆனால் அமெரிக்க பணியாளர்கள் தெளிவான பாதையைக் கண்டுபிடிக்க இன்னும் போராடுகிறார்கள். இது அவமானம். ஆகையால், இந்தப் புதிய திட்டத்தின்மூலம், அவர்களைத் (சர்வதேச மாணவர்களை) தக்க வைத்துக்கொள்ள நிர்வாகமும் நிறுவனங்களும் முடிவுசெய்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில், கோல்ட் கார்டு வலைத்தளம் இப்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் வாயிலாக வார்டன், ஹார்வர்டு மற்றும் எம்ஐடி போன்ற முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் அந்த அட்டையைப் பெற அனுமதிக்கின்றன.
’தங்க அட்டை’ என்பது அமெரிக்காவிற்கு குறிப்பிடத்தக்க மதிப்பை வழங்கக்கூடிய தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு விசா ஆகும். மேலும், இது அமெரிக்க குடியுரிமையை நாடும் புலம்பெயர்ந்தோருக்கான சாத்தியமான பாதையாக ஊக்குவிக்கப்படுகிறது. தனிநபர்கள் $1 மில்லியனுக்கு தங்க அட்டையைப் பெற முடியும். அதேநேரத்தில் நிறுவனங்கள், $2 மில்லியனுக்கு ஒன்றை வாங்க முடியும். தவிர, $15,000 செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம், ஒரு விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்டவுடன், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஊழியர் அமெரிக்காவில் குடியுரிமை பெற தகுதி பெறுவார். இந்த தங்க அட்டையும், தற்போதுள்ள விசா கட்டமைப்பிற்குள் வருவதாகவும், சிறந்த மனிதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர் என்பதையும் உறுதி செய்கிறது

