ஹெச் 1பி விசா | விண்ணப்பித்த இந்தியர்களின் நேர்காணலை 2026க்கு தள்ளிவைத்த தூதரகம்!
ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணலை அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக, குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே தற்காலிகமாக அனுமதிக்கப்படும் H1B விசா, செப்டம்பர் 2025 முதல் $100,000 ஆக உயர்த்தப்பட்டதால், இந்தியர்கள் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தவிர, அதுதொடர்பான விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெச்1பி விசாவில் அமெரிக்காவுக்கு வரக்கூடியவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறது.
அதாவது, ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சமூக வலைதளக் கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இது புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கும், மறு விண்ணப்பம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பான அனைத்து அமெரிக்க தூதரகங்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணலை அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் 2வது வாரம் முதல் இம்மாத இறுதிவரையில் நேர்காணலில் பங்கேற்க இருந்தவர்களுக்கு, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதம் நேர்காணல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் சமூகவலைதள கணக்குகளை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எதிராகவோ, பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாகவோ கருத்துக்கள் பதிவிட்டிருந்தாலோ, ஆதரவு தெரிவித்திருந்தாலோ, அவர்களின் விசாக்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம், “உங்கள் விசா சந்திப்பு மறு திட்டமிடப்பட்டுள்ளது என்று உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருந்தால், உங்கள் புதிய சந்திப்புத் தேதியில் உங்களுக்கு உதவ மிஷன் இந்தியா எதிர்நோக்குகிறது. நீங்கள் முன்னர் திட்டமிடப்பட்ட சந்திப்புத் தேதியில் வந்தால், தூதரகத்தில் சேர உங்களுக்கு அனுமதி மறுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளது.

