IND-PAK தாக்குதல் |மவுனம் கலைத்த மோடி.. உண்மையை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்.. நடந்தது என்ன?
இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணவம், ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், பயங்கரவாதிகளின் 9 முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளில் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. இதனால், இருதரப்பிலும் தாக்குதல் தொடங்கியது. நான்கு நாட்களாக நீடித்த சண்டை, மே 10இல் திடீரென நிறுத்தப்பட்டது. போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தார்.
”போரை நிறுத்தாவிட்டால், அமெரிக்காவுடன் உங்கள் வர்த்தகத்தை நிறுத்துவேன் என்று இந்தியாவையும் பாகிஸ்தானையும் எச்சரித்தேன். உடனே போரை நிறுத்தி விட்டார்கள்” என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அந்தச் சமயத்தில், தொடர்ந்து இதே கருத்தை ட்ரம்ப் வைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது, இந்திய அரசியலில் புயலைக் கிளப்பியதுடன், இதுதொடர்பாக, தொடர்ந்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்தன.
ட்ரம்ப் தலையீடு | எதிர்க்கட்சிகள் விமர்சனம்
”எந்தப் பிரச்னையிலும் வேறு நாட்டின் தலையீட்டை இதுவரை அனுமதிக்காத இந்தியா, முதல் முறையாக அமெரிக்காவிடம் அடிபணிந்துவிட்டது” என எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. பிரதமர் மோடி இதுகுறித்து எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்ததால், அது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை மேலும் தூண்டியது. மோடி, அமெரிக்காவுக்கு அடிபணிந்து விட்டதாகக்கூட கிண்டல் செய்தது. இந்த நிலையில், சமீபத்தில் அதிபர் ட்ரம்பும் பிரதமர் மோடியும் உரையாடினர். அதாவது, கனடாவின் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 தலைவர்கள் உச்சி மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக ட்ரம்ப் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே வாஷிங்டன் திரும்பினார். அவர் புறப்படுவதற்கு முன்பு, மோடியும் ட்ரம்பும் 35 நிமிட தொலைபேசி உரையாடலை நடத்தினர்.
போர் விவகாரம் | பின்வாங்கிய ட்ரம்ப்
அந்த உரையாடலின்போது, ’அமெரிக்காவின் பேச்சுக்கு கட்டுப்பட்டுத்தான் பாகிஸ்தானுடன் நடந்த போரை இந்தியா நிறுத்திக் கொண்டது என்ற கருத்து உண்மையல்ல. இந்தியாவின் பிரச்னைகளில் வேறு நாடுகள் தலையிடவோ, சமரசம் செய்யவோ நாங்கள் அனுமதித்தது இல்லை; இனியும் அனுமதிக்க மாட்டோம். பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் நிச்சயம் பதிலடி தரப்படும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்ததாக இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். அதற்கு, ‘இந்தியாவின் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு எப்போதும் முழுமையாக இருக்கும்’ என ட்ரம்ப் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், போர் முடிந்தும் இந்தப் பிரச்னை தீராத நிலையில், அமெரிக்க அரசு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் மூனீரை அந்நாட்டுக்கு அழைத்திருந்தது மேலும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் இஷாக் தார் தெரிவித்தார். பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளம் தாக்குதலுக்கு உள்ளானதால், போரை நிறுத்த பாகிஸ்தான் ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், அசிம் முனீா் உடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய ட்ரம்ப், ”சண்டை நிறுத்தத்தை இரு நாட்டு தலைவா்கள்தான் தீா்மானித்தனா்” என முதல் முறையாக ஒப்புக்கொண்டாா்.