மோடி - டிரம்ப்  உரையாடல்
மோடி - டிரம்ப் உரையாடல்முகநூல்

மோடி - டிரம்ப் இடையே நடந்த 35 நிமிட உரையாடல்... ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியது என்ன?

கனடா சென்ற பிரதமர் மோடி, தொலைபேசியில் அமெரிக்க அதிபரிடம் 35 நிமிடங்கள் பேசினார் என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இருவரும் என்ன பேசினர். விரிவாக பார்க்கலாம்.
Published on

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, ​​இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் விளக்கினார் என்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் இடையாயான போர் நான்கு நாட்கள் ஆகியும் முடிவுபெறாமல், தீவிரமடைந்திருக்கும்நிலையில், கனடாவில் நடைபெற்ற ஜி 7 மாநாட்டிற்காக வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசர அவசரமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்தநிலையில், ஜி 7 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் டிரம்ப்பின் சந்திப்பு நடைபெறவில்லை. இந்த சூழலில், இருவருக்கும் இடையே தொலைபேசிவாயிலாக 35 நிமிடங்கள் உரையாடல் நடந்தது.

இந்த சந்திப்பில் இருவரும் பேசியது குறித்து வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்து விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ” இந்த உரையாடலின்போது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை பாகிஸ்தான் கெஞ்சியதாலேயே சண்டையை நிறுத்தியதாக ட்ரம்பிடம் மோடி தெரிவித்தார். ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், இரு படைகள் தரப்பிலும் நேரடியாக விவாதிக்கப்பட்டது, மேலும் அது பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் இருந்தது. இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் இந்தியாவில் முழுமையான அரசியல் ரீதியான ஒருமித்த கருத்து உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு, இந்தியா ஏவுகணைகள் மூலம் பதிலடி கொடுக்கும் என்றும், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் மோடி கூறினார்.” என்று மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் ராணுவத் தளபதியுடன் அமெரிக்க அதிபர் விருந்து!

ஜுன் 18 ஆம் தேதியான இன்று, வெள்ளை மாளிகையில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசீம் முனீரைச் சந்திக்கவுள்ளார்.

இந்தநிலையில், 35 நிமிடம் நடந்த உரையாடலில், கனடா பயணத்தை முடித்துகொண்டு இந்தியா திரும்பியதும் அமெரிக்காவிற்கு வருமாறு பிரதமர் மோடியை டிரம்ப் அழைத்ததாகவும், அதற்கு பல்வேறு அலுவல்களை மேற்கோள் காட்டி வர இயலாது என்று பிரதமர் கூறியதாகவும் வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து QUAD உச்சிமாநாட்டிற்கு இந்தியாவிற்கு வர டிரம்பிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார் என்றும் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்த் தெரிவித்த மிஸ்ரி ,” ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி அதிபர் ட்ரம்ப்பிடம் விரிவாகப் பேசினார். ஏப்ரல் 22 க்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தனது உறுதியை இந்தியா முழு உலகிற்கும் தெரிவித்ததாக பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் தெளிவாகக் கூறினார். மே 6-7 இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை மட்டுமே இந்தியா குறிவைத்ததாக பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் நடவடிக்கைகள் மிகவும் அளவிடப்பட்டவை, துல்லியமானவை மற்றும் தீவிரப்படுத்தப்படாதவை என்றார்.

மே 9 ஆம் தேதி இரவு, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பிரதமர் மோடியை அழைத்தார். பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று வான்ஸ் கூறியிருந்தார். இது நடந்தால், பாகிஸ்தானுக்கு இந்தியா இன்னும் பெரிய பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெளிவான வார்த்தைகளில் கூறியிருந்தார். மே 9-10 அன்று இரவு பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா மிகவும் வலுவான பதிலடி கொடுத்தது, இதனால் பாகிஸ்தானின் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது. அதன் இராணுவ விமான தளங்கள் செயல்பட முடியாத நிலைக்குச் சென்றன. இந்தியாவின் வலுவான பதிலடியால், இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது.

குறிப்பாக, பயங்கரவாதத்தை இந்தியா இனி ஒரு மறைமுகப் போராகக் கருதவில்லை என்றும், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது என்றும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் கூறினார் ” என்று தெரிவித்தார்.

முன்னதாக என்ன நடந்தது?

காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. எல்லையில் 4 நாட்களுக்கு இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் நீடித்தது. பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 10-ந்தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

இருநாட்டு தலைவர்களுக்கிடையே தற்போது  உரையாடல் நடந்தது ஏன்?

மோடி - டிரம்ப்  உரையாடல்
மோடி - டிரம்ப் உரையாடல்முகநூல்

ஆனால், அதற்கு அமெரிக்காதான் காரணம் என்றும், இந்தியா, பாகிஸ்தானுடன் வர்த்தகத்தை நிறுத்துவதாக மிரட்டி, சண்டை நிறுத்தம் கொண்டு வந்தேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து பலமுறை பேட்டி அளித்து வந்தார்.

இதனை கேட்ட காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள், இதுகுறித்து விவாதித்த நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்றும், டிரம்ப் தலையீட்டால்தான் போர் பதற்றம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதா? என்று பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில்தான், பிரதமர் மோடி டிரம்ப் இடையே இதுகுறித்தான உரையாடல் தற்போது நடைப்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com