ஆபரேஷன் சிந்தூர் | அழிக்கப்பட்ட 9 முகாம்கள்.. குறி வைக்கப்பட்டது ஏன்?
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பலியாகினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இன்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். 'ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த தாக்குதலில், பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. ஜெய்ஷ்-இ-முகமது (JeM), லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற குழுக்களுடன் தொடர்புடைய ஒன்பது பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதிகாலை 1:05 மணி முதல் அதிகாலை 1:30 மணி வரை நீடித்த இந்தத் தாக்குதலில், அதாவது 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை இந்திய ராணுவமும், விமானப் படையும் ஏவின. இந்த தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தாக்குதல் குறித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. மறுபுறம், இந்தியா தாக்குதல் நடத்திய பகுதிகளின் விவரங்களும் வெளியாகி உள்ளது. இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்திய 9 இடங்களில் 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் பதுங்கு இடங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் ஆகும். 4 இடங்கள் பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் முகாம்கள் அமைத்து பயிற்சி பெற்று வந்த இடங்கள் ஆகும். இந்த 9 இடங்களும் ஒரே நேரத்தில் தாக்கி தகர்க்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்கப்பட்ட 9 இடங்கள்.. எதற்காகத் தெரியுமா?
* பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கோட்லியில் உள்ள மர்காஸ் அப்பாஸ் பயங்கரவாத முகாமும் அழிக்கப்பட்டுள்ளது. இது எல்.இ.டி.யின் தற்கொலை குண்டுவீச்சுக்காரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நரம்பு மையமாகவும் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளுக்கு முக்கிய பயிற்சி உள்கட்டமைப்பாகவும் இருந்துள்ளது.
* எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (LoC) சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தளமான கோட்லியில் உள்ள குல்பூர் முகாம் தாக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பூஞ்ச் தாக்குதலில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கும், 2024 ஜூன் மாதம் யாத்ரீகர் பேருந்து தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதற்கும் காரணமாக இருந்தவர்கள் இந்த முகாமில் பயிற்சி பெற்றவர்களே ஆவர்.
* சர்வதேச எல்லையிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சியால்கோட்டில் உள்ள சர்ஜால் முகாமும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 4 ஜம்மு-காஷ்மீர் காவல் துறையினர் பலியான சம்பவத்திற்கு இந்த இடத்தில் பயிற்சி பெற்றவர்களே மூலக் காரணமாக இருந்துள்ளனர்.
பாகிஸ்தானின் முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் தலைமையகத்தையும் இந்தியா தாக்கியுள்ளது. 2008ஆம் ஆண்டு 166 பேரைக் கொன்ற மும்பை தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்த பயங்கரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப் மற்றும் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட டேவிட் ஹெட்லி ஆகியோர் பயிற்சி பெற்ற முகாம் முரிட்கே ஆகும்.
* பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தையும் இந்தியா தாக்கியுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் மசூத் அசார் அங்கிருந்துதான் பலருக்கு பயிற்சி அளித்துள்ளார். இவ்விடத்துக்குத்தான் உயர்மட்ட பயங்கரவாதிகள் அடிக்கடி வருகை தருவதாகக் கூறப்படுகிறது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலால் சர்வதேச பயங்கரவாதியாக பட்டியலிடப்பட்ட 56 வயதான மசூத் அசார், 2001 நாடாளுமன்றத் தாக்குதல், 2008 மும்பைத் தாக்குதல்கள், 2016 பதான்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் சதித்திட்டத்தில் ஈடுபட்டவர் ஆவார்.
* சர்வதேச எல்லையிலிருந்து சுமார் 12-18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சியால்கோட்டில் உள்ள மஹ்மூனா ஜெயா முகாமும் அழிக்கப்பட்டுள்ளது. இது ஹிஸ்புல் முஜாஹிதீனுடன் தொடர்புடையது மற்றும் கதுவா-ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கான கட்டுப்பாட்டு மையமாக இருந்துள்ளது.
* தங்தார் செக்டரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள முசாபராபாத்தில் உள்ள சவாய் நாலா முகாமும் தாக்கப்பட்டுள்ளது. இது லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய பயிற்சி மையமாக இருந்துள்ளது.
* முசாபராபாத்தில் உள்ள சையத்னா பெலால் முகாமும் குறிவைக்கப்பட்டது. காஷ்மீர் பிராந்தியத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு முழுவதும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் காடு மற்றும் உயிர்வாழும் நுட்பங்களைப் பயிற்றுவிக்கும் இடமாக பெலால் இருந்துள்ளது.
* எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிம்பரில் உள்ள பர்னாலா முகாமும் இந்திய ராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்களைக் கையாளுதல், IED தயாரித்தல் மற்றும் காடுகளில் உயிர்வாழும் நுட்பங்களில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கும் இடமாக இது இருந்துள்ளது.