”அமெரிக்கா சந்தித்து வரும் ஒவ்வொரு பிரச்னைக்கும் வரலாறு காணாத வேகத்தில் தீர்வு காண்பேன்” - ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் இன்றிரவு 10.30 மணிக்கு பதவியேற்கிறார். உலகமே உற்றுநோக்கும் இந்த விழா தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. துணை அதிபராக ஜே.டி.வான்ஸூம் பதவியேற்றுக் கொள்கிறார். கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகை கட்டடத்தின் உள் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 1985 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா உள் அரங்கில் நடப்பது இதுவே முதல்முறையாகும்.
பாரம்பரிய தேவாலய சேவை, வெள்ளை மாளிகை தேநீர் விருந்தை தொடர்ந்து டிரம்ப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வது நடைபெறும். இது அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையின் கீழ் நடைபெறும். இதுதவிர இசை நிகழ்ச்சிகள், கொண்டாட்ட அணிவகுப்பு, அதிபரின் முதல் உரை உட்பட இன்றைய நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ஆதரவாளர்கள் முன் பேசிய ட்ரம்ப், “பதவியேற்ற முதல் நாளில் இருந்தே தன் நடவடிக்கைகள் தொடங்கிவிடும். பதவியேற்பதற்கு முன்பே உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல மாறுதல்கள் தொடங்கிவிட்டது. எங்கள் எல்லைகள் மீதான படையெடுப்பை தடுத்து நிறுத்துவேன். எங்கள் எல்லைகளைப் பாதுகாப்போம். அனைத்து சட்டவிரோத எல்லை அத்துமீறல்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன். நாங்கள் எங்கள் செல்வத்தை மீட்டெடுக்கப் போகிறோம். அமெரிக்க மண்ணில் செயல்படும் ஒவ்வொரு சட்டவிரோத அன்னிய கும்பல் மற்றும் புலம்பெயர்ந்த நபர்களையும் வெளியேற்றுவோம்.
மத்திய கிழக்கில் நீடித்த அமைதிக்கான முதல்படியாக நாங்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அடைந்தோம். இந்த மாற்றங்களுக்கு நான்தான் காரணம் என உலகே காரணம் கூறுகிறது. ஆனால் எனது ஆதரவாளர்களாகிய நீங்கள்தான் இந்த மாற்றங்களுக்கு காரணம். முதலில், நான் அதிபராக இருந்திருந்தால் காஸா போரே நடந்திருக்காது. அதுபோல், நான் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன். மத்திய கிழக்கில் குழப்பத்தை நிறுத்துவேன், 3வது உலகப் போர் நடக்காமல் தடுப்பேன்” எனத் தெரிவித்தார்.