”விபத்துக்குள்ளான ரயில்” - எலான் மஸ்க்கின் புதிய கட்சி குறித்து ட்ரம்ப் கிண்டலாக விமர்சனம்!
அதிபர் ட்ரம்ப் - எலான் மஸ்க் அதிகரித்த மோதல்
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிகப்பெரிய கனவான ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) மசோதாவுக்கும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் அதிகரித்தது. அந்த மசோதாவை எலான் மஸ்க் தொடர்ந்து விமர்சித்ததன் காரணமாகவே அவர்களுக்குள் முட்டல் மோதல் தொடர்ந்தது. இதற்கிடையே, அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதற்கு 1.2 மில்லியன் பயனர்கள் “ஆம்” எனப் பதிலளித்திருந்தனர். இது, அதிபர் ட்ரம்புவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் அதிபர் ட்ரம்பை மோசமாக விமர்சித்ததற்காக எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டார். அதை, ட்ரம்ப் பெரும்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். ஆனாலும் மீண்டும் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. ”ட்ரம்ப் நிறைவேற்ற உள்ள வரி சீர்திருத்த மசோதா நாட்டுக்குப் பெரும் சுமையாக அமையும் என்றும் அது மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால் தான் புதிய கட்சி தொடங்குவது உறுதி” என்றும் மஸ்க் கூறியிருந்தார்.
அதிபரை எதிர்த்து கட்சி தொடங்கிய மஸ்க்
இதற்கிடையே, ட்ரம்பின், ’பிக் பியூட்டி ஃபுல்’ மசோதா கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேறப்பட்டது. இதையடுத்து, எலான் மஸ்க் சொன்னதுபோலவே ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். ’’மக்களுக்குச் சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்தது.
இந்த நிலையில் எலான் மஸ்க்கின் புதிய கட்சி குறித்து அதிபர் ட்ரம்ப், “எலான் மஸ்க் முற்றிலும் தண்டவாளத்திலிருந்து விலகிச் செல்வதைப் பார்ப்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அடிப்படையில் கடந்த ஐந்து வாரங்களில் ஒரு ரயில் விபத்துக்குள்ளாகி வருகிறது. அமெரிக்காவில் அவர்கள் ஒருபோதும் வெற்றிபெறவில்லை என்ற போதிலும், அவர் ஒரு மூன்றாவது அரசியல் கட்சியைத் தொடங்க விரும்புகிறார். இந்த அமைப்பு அவர்களுக்காக வடிவமைக்கப்படவில்லை என்று தெரிகிறது. இங்கே, எப்போதும் இரு கட்சி அமைப்பாகவே இருந்து வருகிறது. மூன்றாம் தரப்பு தொடங்குவது குழப்பத்தையே அதிகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன். மூன்றாம் தரப்பினர் ஒருபோதும் வேலை செய்ததில்லை. எனவே அவர் அதை வேடிக்கை பார்க்க முடியும். ஆனால் அது அபத்தமானது என்று நான் நினைக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.