அமெரிக்கா | மிரட்டல் விடுத்த ட்ரம்ப்.. அடிபணியாத எலான் மஸ்க்!
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிகப்பெரிய கனவான ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) மசோதாவுக்கும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்கிற்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து, அந்த மசோதாவை எலான் மஸ்க் விமர்சித்து வருகிறார். இதன் காரணமாகவே அவர்களுக்குள் முட்டல் மோதல் தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப் குறித்து மோசமாக விமர்சித்த நிலையில், பிறகு அதிலிருந்து பின்வாங்கி எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டார். அதை, ட்ரம்ப் பெரும்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது.
இந்த நிலையில், ட்ரம்ப் நிறைவேற்ற உள்ள வரி சீர்திருத்த மசோதா நாட்டுக்கு பெரும் சுமையாக அமையும் என்றும் அது மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால் தான் புதிய கட்சி தொடங்குவது உறுதி என்றும் மஸ்க் கூறியுள்ளார். ட்ரம்ப்பின் முடிவுகளால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களை காப்பாற்றும் வகையில் அந்த கட்சி இருக்கும் என எக்ஸ் தள பதிவில் எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மஸ்க்கை ட்ரம்ப்பும் கடுமையாகச் சாடியுள்ளார். “அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் என்னை தீவிரமாக ஆதரித்தார். ஆனால் EV வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக நான் கூறி வருகிறேன். இது எலான் மஸ்க்கிற்கும் தெரியும். வரலாற்றில் எந்த மனிதரையும்விட அதிக சலுகைகளை அனுபவிப்பது எலான் மஸ்க்தான். சலுகைகள் மட்டும் இல்லையென்றால், கடையை காலி செய்துவிட்டு தென்னாப்பிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும். அவரால் எந்த ராக்கெட்டையும் செயற்கைக்கோளையும் அனுப்பியிருக்க முடியாது. எந்த காரையும் தயாரித்திருக்க முடியாது“ என ட்ரம்ப் கூறியுள்ளார்.
அதற்கு எலான் மஸ்க், “ட்ரம்ப் விரும்பினால் எனது நிறுவனங்களுக்கான அரசு மானியங்களை நிறுத்திக்கொள்ளட்டும்” எனப் பதிலளித்துள்ளார்.
ட்ரம்ப்புக்கு மிகவும் நெருக்கமாக இருந்த மஸ்க், கடந்த மாதம் அவரை கடுமையாக விமர்சித்துவிட்டு பிரிந்தார். தற்போது மீண்டும் இருவரிடையே வார்த்தை மோதல்கள் வெடித்திருப்பது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.