எலான் மஸ்க்கின் புதிய கட்சி | 3 பேர் ஐக்கியம்? கணித்த ட்ரம்பின் நெருங்கிய நண்பர்!
அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிகப்பெரிய கனவான ’பிக் பியூட்டிஃபுல்’ (Big Beautiful Bill ) மசோதாவுக்கும், உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை அதிகாரியுமான எலான் மஸ்கிற்கும் இடையே மோதல் அதிகரித்தது. அந்த மசோதாவை எலான் மஸ்க் தொடர்ந்து விமர்சித்ததன் காரணமாகவே அவர்களுக்குள் முட்டல் மோதல் தொடர்ந்தது. இதற்கிடையே, அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியிருந்தார். இதற்கு 1.2 மில்லியன் பயனர்கள் “ஆம்” எனப் பதிலளித்திருந்தனர். இது, அதிபர் ட்ரம்புவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அதிபர் ட்ரம்பை மோசமாக விமர்சித்ததற்காக எலான் மஸ்க் மன்னிப்பு கேட்டார். அதை, ட்ரம்ப் பெரும்தன்மையுடன் ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில், மீண்டும் அவர்களுக்குள் மோதல் வெடித்தது. ”ட்ரம்ப் நிறைவேற்ற உள்ள வரி சீர்திருத்த மசோதா நாட்டுக்குப் பெரும் சுமையாக அமையும் என்றும் அது மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டால் தான் புதிய கட்சி தொடங்குவது உறுதி” என்றும் மஸ்க் கூறியிருந்தார். இதற்கிடையே, ட்ரம்பின், ’பிக் பியூட்டி ஃபுல்’ மசோதா கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவேறப்பட்டது.
இதையடுத்து, எலான் மஸ்க் சொன்னதுபோலவே களத்தில் குதித்துவிட்டார். ஆம், ‘அமெரிக்கா பார்ட்டி’ என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ’’மக்களுக்குச் சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம்’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது. தவிர, இது அடுத்த ஆண்டு இடைக்காலத் தேர்தல்களில் அல்லது அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கெடுப்பில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அதேநேரத்தில் எலான் மஸ்க் கட்சி ஆரம்பித்திருப்பதைத் தொடர்ந்து, ”அக்கட்சியில் பிரபல 3 அமெரிக்கர்கள் இணைவார்கள்” என அதிபர் ட்ரம்பின் நெருங்கிய MAGA (அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்) கூட்டாளியான லாரா லூமர் தெரிவித்துள்ளார். ”டக்கர் கார்ல்சன், மார்ஜோரி டெய்லர் கிரீன் மற்றும் தாமஸ் மாஸி உள்ளிட்ட மூன்று பிரபல அமெரிக்கர்கள் மஸ்க்கின் புதிய அமெரிக்கா கட்சியில் இணைவார்கள் எனக் கணித்துள்ளார்.
கடந்த காலங்களில், அமெரிக்க பழைமைவாத அரசியல் விமர்சகரான கார்ல்சனை, லூமர் "போலி ட்ரம்ப் ஆதரவாளர்" என்று முத்திரை குத்தியுள்ளார். அதேபோல், மஸ்க் ஆதரவு பெற்ற சட்டமன்ற உறுப்பினரான மாஸி, முழு ஹவுஸ் டெமாக்ரடிக் காகஸுடன் ட்ரம்பின் கையொப்ப செலவு மசோதாவிற்கு எதிராக வாக்களித்த இரண்டு குடியரசுக் கட்சியினரில் ஒருவர். ட்ரம்ப் முன்பு அவரை "பரிதாபகரமான தோல்வியாளர்" என்று அழைத்துள்ளார்.
முன்னதாக, 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததுடன், அவருக்கு தேர்தல் நிதியையும் வாரி இறைத்தவர் எலான் மஸ்க். இதையடுத்து, ஜனவரி மாதம் அவர் அதிபர் ஆனவுடன் அரசாங்க செயல்திறன் துறையில் (DOGE), எலான் மஸ்கிற்கு தலைமை ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது. இது, அரசின் செலவினங்களைக் குறைக்கும் துறையாகச் செயல்பட்டது. இந்தத் துறை மூலம் தேவையற்ற நிதிகள் நிறுத்தப்பட்டன. தவிர, பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது, அமெரிக்காவில் போராட்டத்திற்கும் வழிவகுத்தது.
ஒருகட்டத்தில், இதனால் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் சரிவையும் சந்தித்தது. இதனால் அந்த நிறுவனத்தின் தலைமை நிறுவன அதிகாரி மாற்றப்படலாம் எனச் செய்திகள் வெளியாகின. ஆனால், இதை எலான் மஸ்க் மறுத்திருந்தார். இதற்கிடையேதான் அதிபரின் பெரிய மசோதாவுக்கும் ட்ரம்ப்வுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டதுடன், DOGE துறையிலிருந்தும் எலான் மஸ்க் விலகினார். ஆனாலும், அதன் பின்னரும் அந்த மசோதாவையும் ட்ரம்பையும் விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.