”நேட்டோவில் உக்ரைன் இணைவது சாத்தியமல்ல” - அதிபர் ட்ரம்ப்!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார்.
அந்த வகையில், இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் டொனால்டு ட்ரம்ப் பேசினார். இதுகுறித்து ட்ரம்ப், ”உக்ரைனுடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார். இருவரிடமும், ட்ரம்ப் பேசியிருப்பதால் உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இருநாட்டு அதிபர்களும் விரைவில் நேரில் சந்தித்து போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும், இந்த சந்திப்பானது சவூதி அரேபியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் உள்துறை செயலாளர், சிஐஏ இயக்குநர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளை உடனடியாக தொடங்க உத்தரவிட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப், ”போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நேட்டோவில் உக்ரைனை இணைப்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல” என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதுதொடர்பாக பெல்ஜியத்தில் பேசிய அமெரிக்காவின் நிலைபாட்டை தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், “ஐரோப்பிய பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு இனியும் முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில் அமெரிக்கா தற்போது இல்லை. தற்போதைய நிலையில் உள்நாட்டு பாதுகாப்பிலும் சீன அச்சுறுத்தலை எதிா்கொள்வதிலும் மட்டுமே அமெரிக்கா கவனம் செலுத்துகிறது.
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டுமென்றால் அந்த நாட்டுக்கு மிக வலிமையான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அந்த நாடு நோட்டோ உறுப்பினராக்கப்படாது. அதற்குப் பதிலாக, ஐரோப்பிய நாடுகளைச் சோ்ந்த படையினரையும் பிற பிராந்தியங்களைச் சோ்ந்த படையினரையும் உக்ரைனுக்கு அனுப்பலாம். ஆனால் அமெரிக்கப் படையினா் அங்கு அனுப்பப்பட மாட்டாா்கள்.
நேட்டோவில் அங்கம் வகிக்கும் பிரிட்டன் அல்லது பிற ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு படைகளை அனுப்பினாலும், அது அந்த நாடுகளின் சொந்த நடவடிக்கையாகத்தான் கருதப்படுமே தவிர, நேட்டோ நடவடிக்கையாகக் கருதப்படாது.
எனவே, ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவு அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள்தான் இனி முன்னிலை வகிக்க வேண்டும். மேலும், நேட்டோ ராணுவக் கூட்டமைப்புக்கான நிதியுதவியை ஐரோப்பிய நாடுகள் அதிகரிக்க வேண்டும். அமைதி ஏற்படவேண்டும் என்றால் ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை இனி திரும்பப் பெற முடியாது என்பதை உக்ரைன் ஏற்றுக்கொண்டாக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.