”ரஷ்யாவை எதிர்த்து இருக்கக்கூடாது” - உக்ரைன் அதிபர் மீது குற்றஞ்சாட்டிய ட்ரம்ப்!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ளதால், இவ்விரு நாடுகளிடையே போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலான்ஸ்கி, “ட்ரம்பால் நிச்சயம் சமாதானத்தைக் கொண்டு வர முடியும் மற்றும் ரஷ்ய அதிபர் புடினின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட முடியும்” எனத் தெரிவித்திருந்தார். அதேபோல், அதிபராகப் பதவியேற்ற ட்ரம்ப், ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் அவர், “ரஷ்ய அதிபர் புதினை எப்போது வேண்டுமானாலும் சந்திக்க தயார். உக்ரைன் விவாகரத்தில் புதின் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வாய்ப்பிருக்கிறது. புதினுடன் விரைவில் பேச உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”உக்ரைன் அதிபர் ஜெலான்ஸ்கி ரஷ்யாவை எதிர்த்து போர் செய்திருக்கக் கூடாது” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமீப பேட்டியொன்றில் இதுகுறித்து ட்ரம்ப், ”ஜெலான்ஸ்கி மிகப்பெரிய, அதிக சக்தி வாய்ந்த நாட்டுக்கு எதிராகப் போரிட்டு வருகிறார். ரஷ்யாவின் ராணுவ பலத்திற்கு எதிராகப் போரிடுவது என்பது வீணானது. அதனை அவர் செய்திருக்கக்கூடாது. போரைத் தவிர்க்க, ரஷ்ய அதிபர் புதினுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.
அதனை, ’நான் எளிதில் செய்திருப்பேன்’ என ஜெலான்ஸ்கி எண்ணுகிறார். இருநாடுகளின் மோதலால் லட்சக்கணக்கானோர் காயமடைந்தும், பாதிக்கப்பட்டும் உள்ளனர். எனினும், ரஷ்யா விரைவில் போரை முடிவுக்குக் கொண்டு வராவிட்டால், அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பெரிய அளவில் வரிகளை விதிக்கும். பொருளாதார தடைகளையும் விதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.