”புதினின் ஆதிக்கத்திற்கு டொனால்டு ட்ரம்ப் முடிவு கட்டுவார்” - உக்ரைன் அதிபர் நம்பிக்கை
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. இதையடுத்து உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துச் செய்தி தெரிவித்தனர். அந்த வகையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, “அமைதி எங்களுக்கு பரிசாக வழங்கப்படாது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் ரஷ்யாவை நிறுத்துவதற்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் நாங்கள் ஒவ்வொருவரும் விரும்பும் அனைத்தையும் செய்வோம். புதிய அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்ப் இதை விரும்புவார் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. அவரால் நிச்சயம் சமாதானத்தைக் கொண்டு வர முடியும் மற்றும் ரஷ்ய அதிபர் புடினின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட முடியும்.
இது, சாத்தியமற்றது என்பதை ட்ரம்ப் புரிந்துகொள்கிறார். ஏனென்றால், இது இருதரப்பினரையும் சமாதானப்படுத்த வேண்டிய தெருச் சண்டையும் அல்ல. இது ஒரு நாட்டிற்கு எதிராக ஒரு முழு அளவிலான ஆக்கிரமிப்பு ஆகும். இன்று ரஷ்யா உங்கள் கையை குலுக்கினால், நாளை அதே கை உங்களைக் கொல்லத் தொடங்காது” எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
இதே ஜெலோன்ஸ்கி, கடந்த ஆண்டு புத்தாண்டுச் செய்தியில், “வரும் ஆண்டில் (2024) ஒவ்வொரு நாளும், உக்ரைன் போதுமான வலிமையுடன் இருக்க நாம் அனைவரும் போராட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.