இந்தியர்களுக்கு மேலும் ஓர் அடி.. இன்னொரு அதிரடி உத்தரவைப் பிறப்பித்த அமெரிக்கா!
அமெரிக்காவில் பணியாற்ற உரிமம் பெற்றுள்ள வெளிநாட்டினர், அதனைப் புதுப்பிக்கும் முன்பு, முழுமையான மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படுவர் என்ற புதிய விதிமுறையை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்திருக்கிறது.
அதிபராகப் பொறுப்பேற்றது முதல், ‘அமெரிக்காவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் டொனால்டு ட்ரம்ப், பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் பணியாற்ற உரிமம் பெற்றுள்ள வெளிநாட்டினர், அதனைப் புதுப்பிக்கும் முன்பு, முழுமையான மறு ஆய்வுக்கு உள்படுத்தப்படுவர் என்ற புதிய விதிமுறையை அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிறப்பித்திருக்கிறது. இது, இன்றுமுதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அது வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘அக்டோபர் 30, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு தங்கள் EADஐப் புதுப்பிக்க தாக்கல் செய்யும் வெளிநாட்டினர், இனி தங்கள் EADஇன் தானியங்கி நீட்டிப்பைப் பெற மாட்டார்கள். EADகளின் தானியங்கி நீட்டிப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவது, அமெரிக்காவில் பணிபுரிய வேலைவாய்ப்பு அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரை அடிக்கடி சரிபார்க்க வழிவகுக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஜோ பைடனின் ஆட்சிக் காலத்தில், அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினரின் பணி உரிமம் தானாக புதுப்பிக்கப்படும் விதிமுறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை, தொழிலாளர்கள் தங்கள் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் ஒப்புதலுக்காக நிலுவையில் இருக்கும்போது 540 நாட்கள் வரை தங்கள் வேலையைத் தொடரலாம். ஆனால், புதிய விதியின்கீழ், தற்போதைய EAD காலாவதியாகும் முன் புதுப்பித்தல் அங்கீகரிக்கப்படாத எவரும் உடனடியாக வேலையைத் தொடர்வது நிறுத்தப்படும். அதேநேரத்தில், இன்றைய தேதிக்கு (அக்.30) முன்பு தானாகவே நீட்டிக்கப்பட்ட EADகளை இந்த விதி பாதிக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ‘வெளிநாட்டினர் தங்கள் EAD காலாவதியாகும் 180 நாட்களுக்கு முன்புவரை புதுப்பித்தல் விண்ணப்பத்தை முறையாக தாக்கல் செய்வதன் மூலம் தங்கள் EAD-ஐ சரியான நேரத்தில் புதுப்பிக்க USCIS பரிந்துரைக்கிறது. ஒரு வெளிநாட்டவர் EAD புதுப்பித்தல் விண்ணப்பத்தை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் காத்திருக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர்கள் தங்கள் வேலைவாய்ப்பு அங்கீகாரம் அல்லது ஆவணங்களில் தற்காலிகக் குறைபாட்டை அனுபவிக்க வாய்ப்புள்ளது’ என DHS தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களில் பெரும் பங்கைக் கொண்ட இந்தியர்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் ஏற்கெனவே நீண்ட கிரீன் கார்டு மற்றும் விசா நிலுவையில் உள்ளனர். மேலும், அமெரிக்க குடியேற்ற அமைப்பில் இந்தியர்கள் ஏற்கனவே மிக நீண்ட காத்திருப்பு நேரங்களை எதிர்கொள்கின்றனர். பலர் நிரந்தர வசிப்பிடத்திற்காக காத்திருக்கும்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டிய இடைக்கால பணி அனுமதிகளை நம்பியுள்ளனர்.
ட்ரம்ப் நிர்வாகத்தின்கீழ் குடியேற்றப் பாதைகளை இறுக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, H-1B விசா கட்டணம் $100,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், H-1B விசாக்களில் வெளிநாட்டு குடிமக்களை பணியமர்த்துவதை நிறுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இப்படி, அடுத்தடுத்த அமெரிக்க நடவடிக்கைகள், அந்நாட்டில் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் ஆராய்ச்சிப் பணியாளர்களின் முதுகெலும்பாக இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு நிச்சயமற்ற எதிர்காலத்தை உருவாக்கியுள்ளது.

