ஜூன் 9 முதல் அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாடுகளுக்குத் தடை.. ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ’அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கையில் பல்வேறு அதிரடி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், அவருடைய முதல் பதவிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட முந்தைய கொள்கைகளில் ஒன்றான, 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதித்துள்ளார்.
சமீபத்தில், கொலராடோவில் இஸ்ரேலுக்கு ஆதரவான குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ட்ரம்ப் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, ஆப்கானிஸ்தான், மியான்மர் (பர்மா), சாட், காங்கோ, இக்வடோரியல் கினியா, எரித்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதால் இந்த நடவடிக்கையை டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டுள்ளார். அதேபோல், புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ட்ரம்பின் இந்த உத்தரவு ஜூன் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ட்ரம்ப் தனது முதல் ஆட்சிக் காலத்தில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஈராக், சிரியா, ஈரான், சூடான், லிபியா, சோமாலியா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்திருந்தார். இந்தத் தடை உத்தரவை ஜோ பைடன் 2021ஆம் ஆண்டு நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.