ட்ரம்ப் அரசு அடுத்த அதிரடி.. சீன மாணவர்களுக்கும் விசா கட்டுப்பாடு! உடனடியாக வந்த எதிர்வினை!
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து படிக்கும் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், இந்திய, சீன மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால், கடந்த ஜனவரியில் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். அதில், விசா கட்டுப்பாடும் ஒன்று. அந்த வகையில், அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என அந்நாட்டுத் தூதரகம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
”அமெரிக்காவில் உள்ள மாணவர்கள் படிப்பைப் பாதியில் விட்டு இடைநிற்றல் அல்லது வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாமல் புறக்கணித்தல் அல்லது பள்ளி, கல்லூரி நிர்வாகத்துக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் தாங்கள் சேர்ந்துள்ள பட்டப்படிப்பிலிருந்து இடைநிற்றல் ஆகிய செயல்களில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களின் விசா திரும்பப் பெறப்படும்” எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சீன மாணவர்களுக்கும் விசா கட்டுப்பாட்டை அமெரிக்கா அரசாங்கம் விதித்துள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பில் இருப்போர் மட்டுமின்றி, குறிப்பிட்ட துறைகளில் படிக்கும் மாணவர்களின் விசாக்களும் ரத்து செய்யப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர், "சீன மாணவர்களின் விசாக்களை ரத்து செய்வதில் தீவிரமாக இருக்கிறோம். உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை எடுப்போம். சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் முக்கிய துறைகளில் படிக்கும் சீன மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை இன்னும் கடினமாக்க பரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்கள்தான் அதிகம் பயின்று வருகின்றனர். கடந்த 2023-24ஆம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர். அதாவது, அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு சீனர்கள் உள்ளனர். சமீபகாலமாக சீனாவுடன் வர்த்தகப் போரில் வேகம் காட்டி வந்த ட்ரம்ப் நிர்வாகம், தற்போது அந்நாட்டு மாணவர்களுக்கு வேட்டு வைத்துள்ளது. ஏற்கெனவே ட்ரம்ப் நிர்வாகம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்து வரும் சூழலில், சீன மாணவர்களுக்கான நெருக்கடியும் அதிகரித்திருப்பது சர்வதேச மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.