60,000ஐ கடந்த இறப்பு... அமைதியை எதிர்நோக்கியுள்ள காசா... இஸ்ரேலின் அலட்சிய பதில் !
அக்டோபர் 7, 2023இல் தொடங்கியது இஸ்ரேல் - ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையேயான போர். இந்த போரில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களை நோக்கி வைக்கப்பட்ட குறிக்கு பெரும்பாலும் பலியானது பொதுமக்கள்தான். குறிப்பாக குழந்தைகள், பெண்கள்தான் அதிகம் கொல்லப்பட்டனர். இது இஸ்ரேலின் போர் உத்தி என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் இறந்த 60 ஆயிரம் பேரில் பாதி பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 60 ஆயிரம் பேரில் எத்தனை பேர் பொதுமக்கள் என்பதும், எத்தனை பேர் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் என்ற விவரமும் வெளியிடப்படவில்லை. ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக காசாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போரால் 90 சதவீத காசா மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மட்டும் இஸ்ரேலின் தாக்குதலில் 77 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதி பேர் உதவி பெறுவதற்காக சென்றவர்கள் என்றும், உணவுப் பொருட்கள் கொண்டுவந்த ட்ரக்குகளுக்கு அருகில் மக்கள் சென்றபோது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், மக்களைக் குறிவைத்து தாக்குவது தங்கள் உத்தி இல்லை எனவும், மக்கள் அதிகம் இருக்கும் பகுதியில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரேல் இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம் என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அதிரடியாக அறிவித்தார். அமைதி நிலவ வேண்டுமென காசா மக்கள் மட்டுமின்றி உலக நாடுகள் பலவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.