'நான் சொல்லித்தான் இந்தியா போரை நிறுத்தியது' 30வது முறையாக சொன்ன டிரம்ப்..!
ஆப்பரேசன் சிந்தூர் குறித்த விவாதங்கள் லோக் சபாவில் அனலைக் கிளப்பிக்கொண்டிருக்கின்றன. ஆளும் பாஜக அரசு நேரு காலத்தில் இருந்து காங்கிரஸ் தவற விட்ட விஷயங்களை மேற்கொள் காட்டிக்கொண்டிருக்க, எதிர்க்கட்சிகளோ பிரதமரின் மௌனத்தை கேள்வி எழுப்பி வருகின்றன.
நேற்று ஆப்பரேசன் சிந்தூர் குறித்து லோக் சபாவில் பேசிய ராகுல் காந்தி, இந்திரா காந்திக்கு இருந்த துணிவில் 50% மோடிக்கு இருந்தால் , பாராளுமன்றத்தில் டொனால்டு டிரம்ப் ஒரு பொய்யர் என்று சொல்ல வேண்டும் என்றார். அதே போல், இந்தியா எந்த போர் விமானங்களையும் இழக்கவில்லை என்பதையும் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று பேசினார் ராகுல் காந்தி.
இதுகுறித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாதென எந்த உலக நாடும் சொல்லவில்லை என பதில் அளித்தார். விவாதத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, டிரம்ப் பொய் சொல்கிறார் என நரேந்திர மோடி இதுவரை தெளிவாக சொல்லவில்லை. தான் தான் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக 29 முறை சொல்லிவிட்டார் டிரம்ப். ஆனால், அது குறித்து மோடி பேச மறுக்கிறார். பிரதமர் தன் முழு உரையில் ஒருமுறைகூட சீனா பற்றி பேசவில்லை. பாகிஸ்தானுக்கு சீனா உதவியது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், மோடியின் வாயில் இருந்து சீனா என்கிற வார்த்தை வர மறுக்கிறது என காட்டமாக விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப். தான் வேண்டுகோள் விடுத்ததால் தான் பாகிஸ்தானுடனான போரை இந்தியா நிறுத்தியது என்று 30வது முறையாக கூறியிருக்கிறார். வெவ்வேறு நாடுகள் நிகழ்த்திய ஐந்து போர்களை தான் மத்தியஸ்தம் செய்ததாகவும், ஆனால் அவருக்கு எந்த கிரெடிட்டும் கிடைப்போவதில்லை என்றும் பேசியிருக்கிறார் டிரம்ப்.
இதுவரையில் டிரம்ப் பேசிய எதற்கும் பிரதமர் மோடி வெளிப்படையாக மறுப்பு தெரிவிக்காத நிலையில், மீண்டும் தான் தான் இந்தியா பாகிஸ்தான் போரை நிறுத்தச் சொன்னதாக பேசியிருப்பது ராகுல் காந்தியின் கருத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.