வெனிசுலா எண்ணெய் விவகாரம் | கண்டிஷன் போட்ட ட்ரம்ப்.. பதிலடி கொடுத்த கியூபா!
வெனிசுலாவிடம் எண்ணெய்யைப் பெற்றுக்கொண்டு பதிலாக பாதுகாப்புச் சேவைகளை அந்நாட்டுக்கு வழங்கியதாக அமெரிக்க அதிபர் வைத்த குற்றச்சாட்டுகளை கியூப அதிபர் மீகல்டீயஸ் கனெல் மறுத்துள்ளார்.
போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கையில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் அமெரிக்கா படையினரால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். தற்போது அமெரிக்க சிறையில் உள்ள அவர்கள், இதுதொடர்பான வழக்கை எதிர்கொண்டுள்ளனர். இதற்கிடையே, மதுரோ கைது நடவடிக்கைக்குப் பிறகு துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் வெனிசுலாவின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இருப்பினும், வெனிசுலா நிர்வாகத்தை அதிபர் ட்ரம்பே கட்டுப்படுத்துகிறார். மேலும் அங்குள்ள எண்ணெய் வளத்தை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறார். தவிர, அதன்மூலம் கிடைக்கும் வருவாய் அமெரிக்க கருவூலத்திற்குச் செல்லப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம், வெனிசுலாவுடன் நட்புறவு கொண்டிருக்கும் நாடுகளுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், கியூபா நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
”கியூபா மிக விரைவில் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள வேண்டும். இல்லையெனில் அந்நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர், தனது சமூக வலைதளப் பக்கமான 'ட்ரூத் சோஷியல்' தளத்தில், "இனி கியூபாவிற்குப் பணமோ அல்லது எண்ணெய் விநியோகமோ செல்லாது. இது உறுதி காலம் கடந்துபோவதற்குள் அவர்கள் ஓர் உடன்படிக்கைக்கு வருமாறு நான் கடுமையாக வலியுறுத்துகிறேன். வெனிசுலாவின் முன்னாள் அதிபர்களுக்கு பாதுகாப்பு சேவைகளை வழங்கியதற்காக, கியூபா பல ஆண்டுகளாக அங்கிருந்து அதிகப்படியான பணத்தையும் எண்ணெய்யையும் பெற்று வந்தது. இனி அது நடக்காது” எனவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டிற்கு கியூபா அதிபர் மீகல்டீயஸ் கனெல் பதிலளித்துள்ளார். அவர், ”கியூபா சுதந்திரமான, இறையாண்மையுள்ள ஒரு நாடு. கியூபாவை விமர்சிக்க அமெரிக்காவிற்கு எந்தத் தகுதியும் இல்லை. மனித உயிர்களைக்கூட வியாபாரமாகப் பார்க்கும் நாடு அமெரிக்கா. கடந்த 60 ஆண்டுகளாக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளே தற்போதைய தங்கள் நெருக்கடிகளுக்குக் காரணம். ஆயினும், இதிலிருந்து மீள கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவோம்” என கியூபா அதிபர் தெரிவித்தார். இதற்கிடையே கியூபாவுடனான நட்பு தொடரும் என வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, வெனிசுலாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து ட்ரம்ப், ”வெனிசுலாவை பிணைக்கைதியாக வைத்திருந்த பல 'குண்டர்கள்' அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டனர். இனி வெனிசுலாவிற்கு அத்தகைய பாதுகாப்புத் தேவையில்லை. அமெரிக்க ராணுவமே இனி அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
வெனிசுலாவிடமிருந்து 50 சதவிகித எண்ணெய்யை கியூபாவே பெற்று வந்தது. அது, நாளொன்றுக்கு சுமார் 27,000 பேரல் எண்ணெய்யை வெனிசுலாவிடமிருந்து பெற்று வந்தது. தற்போது வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடைக்கால அதிபர் மூலம், வெனிசுலா எண்ணெய்யை அமெரிக்காவிற்கு அனுப்புவதில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இதனால் கியூபாவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகம் முற்றிலுமாகத் தடைபட்டுள்ளது, இது அந்த நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் எனக் கருதப்படுகிறது.

