வெனிசுலா அதிபர் கைது | ”இந்தியாவிலும் நடக்கலாம்” - திரியைப் பற்றவைத்த காங். Ex CM!
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவான் இந்தியாவையும் வெனிசுலாவையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார்
காங்கிரஸின் மூத்த தலைவரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும் பிருத்விராஜ் சவான், சமீபகாலமாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருந்தார். ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே இந்தியா தோற்கடிக்கப்பட்டதாகவும், நான்கு நாள் மோதலின் போது இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவையும் வெனிசுலாவையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர், “வெனிசுலா விஷயத்தில் இந்தியா வழக்கம்போல் பேசவில்லை, ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ரஷ்யாவும் சீனாவும் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அமெரிக்கா செய்ததை விமர்சித்துள்ளன. உக்ரைன் போரிலும் இதேதான் நடந்தது. நாம் எந்த பக்கமும் நிற்கவில்லை. இஸ்ரேல்-ஹமாஸ் விஷயத்திலும் நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை, இப்போது நாம் அமெரிக்கர்களைப் பார்த்து மிகவும் பயந்து, என்ன நடந்தது என்பதை விமர்சிக்கக்கூட முயற்சிக்கவில்லை. வெனிசுலாவில் நடந்தவை அனைத்தும் ஐ.நா. சாசனத்திற்கு எதிரானது. தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் கடத்தப்பட்டுள்ளார். நாளை வேறு எந்த நாட்டிற்கும் இது நடக்கலாம் என்பது மிகவும் கவலைக்குரியது. நாளை இது இந்தியாவிற்கும் நடக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாகவும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப் பொருள் பரவலை ஊக்குவிப்பதாகவும் அமெரிக்க தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தநிலையில், கடந்த 3ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. இந்த நிலையில்தான் பிருத்விராஜ் சவானின் கருத்து வந்துள்ளது.

