”காசாவில் மக்கள் பட்டினியால் சாகுறாங்க..” - ஐநா கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிராக ஒலித்த குரல்கள்!
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இஸ்ரேலுக்கும் கவுன்சில் உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இஸ்ரேலிய பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்த வேண்டும் என்று இஸ்ரேல் கூறியது. ஆனால், பெரும்பாலான கவுன்சில் உறுப்பினர்கள், காசாவில் பாலஸ்தீனியர்கள் எதிர்கொள்ளும் மனிதாபிமான நெருக்கடிக்கு இஸ்ரேலே காரணம் எனக் குற்றம்சாட்டினர்.
ரஷ்யாவின் தூதர் டிமிட்ரி போல்யான்ஸ்கி, பிணைக்கைதிகளின் நிலை பரிதாபகரமானது என்றாலும், காசாவில் உள்ள மக்கள் அனைவரும் பட்டினியால் வாடுவதாகக் குறிப்பிட்டார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்தும் பேசினார். அதேபோல், பிரிட்டன் தூதர் பார்பரா வுட்வர்ட், காசாவில் நிலவும் பட்டினியைக் குறிப்பிட்டு, காயங்கள் மாதக்கணக்கில் ஆறாத அளவுக்கு குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரஷ்யாவும் சில ஐநா பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் இஸ்ரேலுக்கு எதிரான பொய்களை பரப்புவதாக இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் கிதியோன் சா’அர் குற்றம்சாட்டினார். பிணைக்கைதிகள் உணவின்றி வாடுவதாகவும், காஸாவுக்கு இஸ்ரேல் அனுப்பிவைக்கும் உதவிகளை ஹமாஸ் திருடுவதாகவும் அவர் கூறினார். பிணைக்கைதியின் சகோதரர் இட்டாய் டேவிட், "பிணைக் கைதிகளை இறக்க விடாதீர்கள்," என்று உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில் புதன்கிழமை அன்று காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உணவு வாங்க வரிசையில் காத்திருந்த 36 பேர் உயிரிழந்தனர். காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் இதுவரை 60,336 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.