உ.பி. | ‘வீடு தேடி வரும் கங்கை’.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு.. எதிர்க்கட்சிகள் விமர்சனம்!
இந்தியாவின் வடமாநிலங்களில் சமீபகாலமாக அதிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உத்தரகாண்ட், இமாச்சல், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அமைச்சர் ஒருவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால், கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தால், பிரயாக்ராஜ், வாரணாசி, கான்பூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பாஜக கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சித் தலைவரும் மீன்வளத் துறை அமைச்சருமான சஞ்சய் நிஷாத், கான்பூர் தேஹாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டார். அப்போது அங்குள்ள பெண்களிடம், ”கங்கை நதி உங்கள் கால்களைச் சுத்தம் செய்ய உங்கள் வீட்டு வாசலின் படிகளை அடைகிறது. இது உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்” எனக் கூறியுள்ளார். இதில் அதிருப்தியடைந்த பெண்கள், ”கங்கையின் ஆசியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளனர். அவருடைய இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அவரை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் சர்வேந்திர பிக்ரம் சிங், "வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் கள யதார்த்தம் மற்றும் நிலவரத்தை அவர் அறியவில்லை. மாநில அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தவறிவிட்டது. அதன் அமைச்சர் புகைப்பட வாய்ப்புகளைத் தேடுகிறார். வெள்ளத்தால் மக்கள் தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்து கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற அறிக்கைகள் உ.பி. அமைச்சர்கள் கள யதார்த்தத்திலிருந்து எவ்வளவு துண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. இது அமைச்சரின் உணர்வின்மையைக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சஞ்சய் நிஷாத் பிடிஐக்கு அளித்துள்ள பேட்டியில், “நான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிஷாத் பகுதிக்கு விஜயம் செய்திருந்தேன், அங்கு அவர்களுடன் உரையாடும்போது, புண்ணியம் தேடி, தொலைதூர இடங்களிலிருந்து மக்கள் கங்கையில் புனித நீராட வருகிறார்கள். ஆனால், இங்கே கங்கா 'மையா' மக்களின் வீட்டு வாசலுக்கே வந்திருக்கிறது. நாங்கள், எங்கள் வாழ்க்கை மற்றும் வாழ்வாதார ஆதாரமான நதிகளை வணங்குகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.