தென் சீனக் கடல் | பிலிப்பைன்ஸுக்குப் பயத்தைக் காட்டிய சீனா.. பின்னணியில் அமெரிக்கா?
பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமைந்துள்ள, இந்த முக்கோண வடிவப் பாறைத் திட்டு, மீன்பிடி உரிமை மற்றும் கடல் எல்லை காரணமாக சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளால் உரிமை கோரப்படுகிறது.
உலகளவில் ஆண்டுதோறும் 3 டிரில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறும் முக்கிய கடல்வழிப் பாதையாக தென் சீனக் கடல் (ஸ்கார்பரோ ஷோல் - Scarborough Shoal) விளங்குகிறது. இது, தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக சர்ச்சையில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும். இது, பிலிப்பைன்ஸின் கடற்கரையிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் உள்ளது. இது, பிலிப்பைன்ஸில் 'பாஜோ டி மாசின்லாக்' (Bajo de Masinloc) என்றும், சீனாவில் 'ஹுவாங்யான் டாவ்' (Huangyan Dao) என்றும் அழைக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) அமைந்துள்ள, இந்த முக்கோண வடிவப் பாறைத் திட்டு, மீன்பிடி உரிமை மற்றும் கடல் எல்லை காரணமாக சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளால் உரிமை கோரப்படுகிறது.
இந்த உரிமை கோரிக்கை தொடர்பான பிரச்னைகள் இன்றுவரை தீரவில்லை. புருனே, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் உரிமை கோரும் இந்தக் கடற்பகுதியின் பெரும்பகுதியை சீனா தன்னுடையதாகக் கூறுவது பிராந்திய அரசியல் பதற்றத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. 2016-ஆம் ஆண்டு சர்வதேச நடுவர் மன்றம் சீனாவின் பரந்த உரிமைக் கோரிக்கைக்கு சட்ட அடிப்படை இல்லை என்று தீர்ப்பளித்திருந்தாலும், அந்தத் தீர்ப்பை சீனா ஏற்கவில்லை.
இந்த நிலையில், தென் சீனக் கடல் மணல் திட்டைத் தடுக்க சீனா கப்பல்களையும் தடுப்பணையையும் நிலைநிறுத்தியுள்ளது. பெரிய சீன ரோந்துப் படகுகளால் அடிக்கடி விரட்டியடிக்கப்படும் தனது மீனவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக, பிலிப்பைன்ஸ் தனது சொந்த கடலோரக் காவல் மற்றும் மீன்பிடிக் கப்பல்களை அனுப்பிவருகிறது. இந்த நிலையில், ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் அங்குள்ள மணல் திட்டின் நுழைவாயிலில் சீனாவின் மீன்பிடிப் படகுகள் நங்கூரமிடப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளன. அத்துடன் அதன் குறுக்கே ஒரு மிதக்கும் தடுப்பு நீண்டிருப்பதையும் படங்கள் காட்டுகின்றன. அந்தப் புகைப்படத்தில் நான்கு மீன்பிடிப் படகுகள், சீனக் கடலோரக் காவல் படை மற்றும் ஒரு புதிய மிதக்கும் தடுப்பு ஆகியவை அங்கு காணப்படுகின்றன.
பிலிப்பைன்ஸுடனான ஒரு மோதலுக்குப் பிறகு 2012-இல் அந்த மணல் திட்டை கைப்பற்றியதிலிருந்து, சீனா அங்கு கடலோரக் காவல்படையையும் மீன்பிடி இழுவைப் படகுகளையும் நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, இந்தப் பகுதியின் பவளப்பாறைகள் அருகே சயனைடு பயன்படுத்தப்பட்டதாக பிலிப்பைன்ஸ் வெளியிட்ட குற்றச்சாட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. ஸ்ப்ராட்லி தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள செகண்ட் தாமஸ் ஷோல் (அயுங்கின் ஷோல்) பகுதியில் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் கடற்படையினர் கைப்பற்றிய புட்டிகளில் நச்சுத்தன்மை கொண்ட சயனைடு இருப்பதை ஆய்வக பரிசோதனைகள் உறுதி செய்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதை சீனா மறுத்திருந்தது. அதேநேரத்தில், இந்த தடுப்பணைக்குக் காரணம், பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் கைகோர்த்திருப்பதே ஆகும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஜனவரி மாதம் பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்காவின் ராணுவங்கள் அந்த மணல் திட்டுப் பகுதியில் ஒன்றாகப் பயணித்தன. மேலும், இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான துருப்புக்கள், இந்த மாதம் பிலிப்பைன்ஸ் தீவுக்கூட்டம் முழுவதும், குறிப்பாக ஸ்கார்பரோ ஷோலிலிருந்து சுமார் 120 கடல் மைல் தொலைவில் உள்ள ஜம்பாலெஸ் உட்பட, பெரிய அளவிலான பயிற்சிகளைத் தொடங்க உள்ளனர். இது, சீனாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியே அங்கு தடுப்பணையை அமைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

