ஹார்முஸை முடக்கிய டிரம்ப்.. எங்கள் விவகாரங்களில் தலையிடாதீர்கள் - எச்சரிக்கும் சீனா!
ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு வார இடைக்கால போர்நிறுத்தம் அமலான நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 11 நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது எந்த உடன்படிக்கையும் எட்டப்படாத நிலையில், ஈரானுக்கு கெட்ட செய்தி என கூறிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அமெரிக்கா திரும்பினார்.
உடன்படிக்கை எட்டப்படாத இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய படி, ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்து நாடுகளின் கப்பல்களையும் அமெரிக்காவின் சென்ட்காம் தலைமையிலான கடற்படை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் தான், ஹார்மூஸை முழுவதுமாக மூடுவதை அமெரிக்கா அறிவித்தவுடன் சீனா ஈரானுக்கு ஆதரவளித்துள்ளது. மேலும், ஈரான் உடனான சீனாவின் இருதரப்பு உறவுகளில் தலையிட வேண்டாம் என்று கூறி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனா வெளியிட்ட அறிக்கையில், உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் சீனா உறுதியாக உள்ளது என்றும் மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எங்கள் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் நீர்ப்பரப்பிற்குள் சென்று வருகின்றன. ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. நாங்கள் அவற்றை மதித்து நடப்போம்; மற்றவர்கள் எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளது .
சீனாவின் எண்ணெய் தேவையில் கிட்டத்தட்ட 40 சதவீதத்தையும், திரவ இயற்கை எரிவாயு (LNG) தேவையில் குறைந்தபட்சம் 30 சதவீதத்தையும் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் வர்த்தகம் மூலமாகவே பெறுகிறது. எனவே, வளைகுடாவில் உள்ள இந்த முக்கிய நீர்வழிப்பாதையைப் பாதுகாப்பதற்காக, சீனா போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
