வங்கதேசம் | ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. கோரிக்கை வைத்த தலைமை வழக்கறிஞர்!
பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 முன் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்துள்ளார்.
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனாமீது அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடந்த கிளர்ச்சியின்போது ஏற்பட்ட மரணங்களுக்காக, பதவி நீக்கம் செய்யப்பட்ட வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 முன் தலைமை வழக்கறிஞர் வாதங்களை முன்வைத்துள்ளார்.
தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம், “கடந்த ஆண்டு நடந்த மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பின்னணியில் இருந்தவர் ஹசீனா. அவரது வழிகாட்டுதலின்கீழ் நடத்தப்பட்ட 1,400 கொலைகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டிக்கப்பட வேண்டுமானால், அவர் 1,400 மரண தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அது மனிதரீதியாக சாத்தியமற்றது என்பதால், குறைந்தபட்சம் ஒரு மரண தண்டனையாவது அவசியம் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், அது அநீதியாக இருக்கும்” என்று என்று அவர் கூறியதாக தி டெய்லி ஸ்டார் தெரிவித்துள்ளது. மேலும், உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கானுக்கும் மரண தண்டனை விதிக்க வலியுறுத்தினார்.