வங்கதேசம் | ஷேக் ஹசீனா கட்சிக்கு தடை.. இடைக்கால அரசு அதிரடி!
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே, இடைக்கால அரசின் செயல்களை அவாலி லீக்கின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டி வருகிறார். தொடர்ந்து இதுதொடர்பாக சமூக வலைதளங்கள் மூலம் தொண்டர்களிடம் பேசி வருகிறார்.
இந்த நிலையில், அவருடைய கட்சிக்கு, அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் காக்க, அவாமி லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹசீனாவின் கட்சியைத் தடை செய்யக் கோரி, யூனுஸின் வீட்டிற்கு வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.