மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்.. ஷேக் ஹசீனா மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் குற்றச்சாட்டு!
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்கில், ஷேக் ஹசீனா மீது அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக PTI செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை அடக்க முயற்சித்ததற்காக முன்னாள் பிரதமர், முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்ஸாமான் கான் மற்றும் முன்னாள் காவல் ஆய்வாளர் அப்துல்லா அல் மாமுன் ஆகியோர் மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான வழக்கை ஐ.சி.டி பதிவு செய்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாமுன் மட்டும் குற்றத்தை ஒப்புக்கொண்டு, இந்த வழக்கில் அரசு சாட்சியாக சேரக் கோரியுள்ளதாக வங்கதேச பிராந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு ஐ.சி.டி ஆறு மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது. இந்தியாவில் தஞ்சமடைந்த பின்னா், முதன்முறையாக ஒரு வழக்கில் அவா் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.