செர்னோபெல் அணு உலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்.. போர் நிறுத்தம் குறித்து ஜெலன்ஸ்கி கேள்வி!
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், செர்னோபெல் அணு உலை மீது ரஷ்யா இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அணு உலையின் மேற்கூரை தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, விரைந்து வந்த மீட்புக்குழுவினர் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த தாக்குதலில் அணு உலையில் இருந்து கதிரியக்கம் வெளியேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலையில், கடந்த 1986ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டது. அணு உலையில் இருந்து வெளியேறிய அணு கசிவால் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், அணு கசிவு பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த விபத்தை தொடர்ந்து அணு உலை மூடப்பட்டது. ஆனாலும், அணு உலையில் இருந்து கதிரியக்கம் தொடர்ந்து வெளியேறிய நிலையில் அதை தடுக்க இரும்புச் சட்டம் (steel arch) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அணுக் கதிர்வீச்சு தடுப்புக் கட்டமைப்பானது விபத்து நேரிட்ட நான்காவது அணு உலையின் மிச்சங்களை பாதுகாக்கும் மற்றும் கதிர்வீச்சுப் பரவாமல் தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் வெடிகுண்டு தாக்குதலில் அங்கு தீப்பற்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் டொனால்டு ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, விரைவில் இந்த நாடுகளுக்குள் சவூதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”தங்கள் கருத்துகளை கேட்காமல் அமைதி பேச்சுவார்த்தை சாத்தியமில்லை” என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “உக்ரைன் சுதந்திரமான நாடு. எங்கள் பங்களிப்பு இல்லாமல் அமெரிக்கா - ரஷ்யா ஏற்படுத்தும் அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். தான் விரும்பியபடி எதுவும் நடக்காததால் பேச்சுவார்த்தை நடத்த புதின் விரும்புகிறார். ரஷ்யாவுடன் பேச்சு நடத்தும் முன் அமெரிக்கா - உகரைன் சேர்ந்து திட்டம் வகுக்க வேண்டும். புதினை ட்ரம்ப் சந்திப்பதற்கு முன்னர், ட்ரம்ப்பை சந்திக்க நான் விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.