பாலஸ்தீன அரசை அங்கீகரித்த பிரான்ஸ்.. அமெரிக்கா, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு!
பாலஸ்தீன அரசை அங்கீகரித்த பிரான்ஸ்
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இதுவரையில், 57,800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மறுபுறம், காஸாவில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசர உதவிகள்கூட கிடைக்காமல் பட்டினியில் சாகும் நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து ஐ.நா. தொடர்ந்து தனது கவலைகளைப் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ”மத்திய கிழக்கில் ஒரு நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அதன் வரலாற்று உறுதிப்பாட்டிற்கு உண்மையாக, பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று நான் முடிவு செய்துள்ளேன்" என அவர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கையை வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தையும் மக்ரோன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிரான்ஸ் அறிவிப்புக்கு இஸ்ரேல், அமெரிக்கா எதிர்ப்பு
அவருடைய இந்த அறிவிப்பை, பாலஸ்தீனம் வரவேற்றிருந்தாலும் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ”இது ஆபத்தானது மற்றும் தவறானது. அக்டோபர் 7 படுகொலைக்குப் பிறகு பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிக்கிறது. அத்தகைய அரசு, மற்றொரு ஈரானிய பினாமியாக மாறக்கூடும். பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலுடன் இணைந்து அமைதியை நாடவில்லை. அவர்கள், அதன் அழிவை நாடுகிறார்கள்" என எச்சரித்துள்ளார்.
அதேபோல், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவும், பிரான்சின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துள்ளார். அவர், "இது, அக்டோபர் 7 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் முகத்தில் அறைந்த அறை" எனத் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நாடுகள்
பாலஸ்தீன அரசை இப்போது அங்கீகரிக்கும் அல்லது அங்கீகரிக்கத் திட்டமிடும் 142 நாடுகளில், அதிலும், ஐரோப்பிய நாடுகளில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்த மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் பிரான்ஸும் ஒன்று. ஐரோப்பாவில் ஒரு டஜனுக்கும் அதிகமான நாடுகள், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கின்றன. 1967 மத்திய கிழக்குப் போரின்போது இஸ்ரேல் கைப்பற்றிய மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா ஆகிய பகுதிகளில் ஒரு சுதந்திர அரசை உருவாக்க பாலஸ்தீனியர்கள் பல தசாப்தங்களாக முயன்று வருகின்றனர். இங்கு இரண்டு மில்லியன் மக்கள் உள்ளனர். இதற்கு இஸ்ரேலும், அதன் ஆதரவு பெற்ற நாடுகளும் நீண்டகாலமாக எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில்தான், பிரான்ஸின் இத்தகைய அறிவிப்பு வந்துள்ளது. இந்த நடவடிக்கையில், இங்கிலாந்து மற்றும் கனடா உள்ளிட்ட நட்பு நாடுகளின் எதிர்ப்பு இருந்தபோதிலும், பிரான்ஸ் இதில் உறுதியாக உள்ளது. இந்த நடவடிக்கை, மற்ற தயக்கமுள்ள நாடுகளையும் பின்பற்ற ஊக்குவிக்கும் என்று மக்ரோனின் குழு நம்புகிறது. முன்னதாக, கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன அரசை ஸ்பெயின் அங்கீகரித்திருந்தது. அதைத் தொடர்ந்து அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.