வங்கதேசம் | ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை.. அவாமி லீக் கண்டனம்!
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யபட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரை வங்காள தேசத்திற்கு திருப்பி அனுப்பும்படி அந்நாட்டு அதிகாரிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனினும், ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையே, ஷேக் ஹசீனாவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதித்துள்ளது. நீதிபதி கோலம் மோா்துஸா மொசும்தாா் தலைமையிலான மூவா் கொண்ட தீா்ப்பாயக் குழு நேற்று, இந்தத் தீா்ப்பை வழங்கியுள்ளது. ’தீா்ப்பின்படி, ஷேக் ஹசீனா கைது செய்யப்படும் அல்லது நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலிருந்து இந்தத் தண்டனை அமலுக்கு வரும்’ என்று அரசு தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தஞ்சமடைந்த பின்னா் முதன்முறையாக ஒரு வழக்கில் அவா் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த தீர்ப்பை அவரது கட்சியான அவாமி லீக் எதிர்த்துள்ளது. இதுதொடர்பாக கண்டன அறிக்கையும் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிடுள்ள அறிக்கையில், ““சட்டவிரோதமான மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான இடைக்கால போராளி ஆட்சியால் உருவாக்கப்பட்ட இந்த தீர்ப்பாயம், ஒரு மாதத்திற்குள் இந்த ஒருதலைப்பட்சமான தீர்ப்பை வெளியிடுவதற்கு சட்டம் மற்றும் நீதியின் அனைத்து விதிமுறைகளையும் முன்னுதாரணங்களையும் அப்பட்டமாக மீறியுள்ளது. இதுபோன்ற ஒரு அவமானகரமான செயல் பங்களாதேஷின் நீதித்துறை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதது” எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இக்கட்சி தேர்தலில் போட்டியிடாத வண்ணம் தற்போதைய இடைக்கால அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.