வங்கதேசம் | ஷேக் ஹசீனாவுக்கு மேலும் சிக்கல்.. தேர்தலில் போட்டியிட தடை!
அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து வங்கதேசத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் அங்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது.
அதேநேரத்தில், ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை மற்றும் ஊழல் வழக்கு வங்காளதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக கைது வாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவருடைய கட்சிக்கு, அந்நாட்டு இடைக்கால அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என இடைக்கால அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைக் காக்க, அவாமி லீக் கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் நடந்துவரும் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவாமி லீக் கட்சியின் பதிவையும் இடைநிறுத்த அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவாமி லீக் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளையும் தடைசெய்து உள்துறை அமைச்சகம் ஒரு முறையான உத்தரவை பிறப்பித்த சிறிது நேரத்திலேயே, தேர்தல் ஆணையமும் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணைய செயலாளர் அக்தர் அகமது, “அவாமி லீக் மற்றும் அதன் துணை அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ள நிலையில், கட்சியின் பதிவை இடைநிறுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் வரவிருக்கும் தேசிய தேர்தல்களில் பங்கேற்க அந்தக் கட்சியைத் தகுதி நீக்கம் செய்துள்ளது.
முன்னதாக, கடந்த மே 11ஆம் தேதி இரவு, வங்கதேசம் இடைக்கால அரசாங்கம் திருத்தப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட தனிநபர்கள் அல்லது அமைப்புகளின் அறிக்கைகளை வெளியிடுவதையோ அல்லது பரப்புவதையோ தடை செய்யும் ஓர் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இந்தச் சட்டத்தின் மூலமாகவே அவாமி லீக் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அவாமி லீக் இந்த முடிவை சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் "சட்டவிரோத அரசாங்கத்தின் அனைத்து முடிவுகளும் சட்டவிரோதமானவை" எனப் பதிவிட்டுள்ளது.
1949ஆம் ஆண்டு உருவான அவாமி லீக் கட்சி, 1971ஆம் ஆண்டு பங்களாதேஷின் சுதந்திரப் போரில் முக்கிய பங்கு வகித்தது. தவிர, பல ஆண்டுகளாக அந்நாட்டுத் தேசிய அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தேர்தலுக்கு முன்பு அக்கட்சிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது நாட்டின் அரசியலில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. முன்னதாக, ஹசீனா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.