“நஸ்ருல்லாவை திருமணம் செய்ததற்காக...”- பாக். சென்று மதம் மாறிய அஞ்சுவுக்கு வீடு வழங்கிய தொழிலதிபர்
சில வாரங்களுக்கு முன், உத்தரப்பிரதேசத்தில் வசித்துவந்த ஒருவர் மீது காதல்கொண்டு, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சீமா ஹைதர் என்பவர் தன்னுடைய 4 குழந்தைகளுடன் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். இங்கு அவர் மதம் மாறி, அந்நபரை திருமணமும் செய்துகொண்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாய் வசித்து வருகின்றனர். அதேநேரம் சீமா ஹைதர் இந்தியாவுக்குள் நுழைந்தது குறித்து தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்த அஞ்சு என்ற பெண், தன் கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு முகநூல் நண்பரான நஸ்ருல்லாவைச் சந்திக்க சமீபத்தில் பாகிஸ்தான் சென்றார். இதில் அஞ்சு உரிய உரிமைகளை பெற்றே பாகிஸ்தான் சென்றார்.
இருப்பினும் அவரது பயணம் பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. இருப்பினும் நஸ்ருல்லா, அஞ்சு தன் தோழி என்றே கூறினார்.
போலவே ‘நஸ்ருல்லா என் நண்பர் மட்டுமே’ எனக்கூறி வந்த அஞ்சு, பின் இஸ்லாம் மதத்துக்கு மாறி நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதற்காக அஞ்சு, தன் பெயரை ஃபாத்திமா என மாற்றிக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இவர்களின் திருமணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல்திர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் சட்டப்படி நடைபெற்றது. இந்த தகவல்களை அந்நாட்டுக் காவல் துறையும் உறுதி செய்திருந்ததது. அஞ்சுவுக்கு இந்தியாவில் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் பாகிஸ்தான் சென்று அங்கு ஒருவரை திருமணம் செய்துகொண்டார் என்ற செய்தி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன்பிறகு அவர்களுடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின. இந்த நிலையில், அஞ்சு என்கிற பாத்திமா பாகிஸ்தான் நபரை மதம் மாறி திருமணம் செய்துகொண்டதற்காக, அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அவருக்கு ரொக்கப் பரிசு, நிலம், வேலைவாய்ப்பு உட்பட பல பரிசுகளைக் கொடுத்துள்ளார். அஞ்சு மற்றும் நஸ்ருல்லாவிடம் அவர் உரையாடுவதும், அவர்களுக்கு பரிசுப் பொருட்களைக் கொடுத்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மோசின் கான் அப்பாஸி. இவர் பாக் ஸ்டார் குரூப் நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவர்தான் அஞ்சு - நஸ்ருல்லாவுக்கு 10 மார்லா நிலம், பாகிஸ்தான் மதிப்பில் 50 ஆயிரம், இன்னும் சில பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து மோசின் கான், “அஞ்சுவுக்கு இப்போது ஃபாத்திமா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அஞ்சு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வந்து மதம் மாறியுள்ளார். அவரை வரவேற்கும் விதமாகவே இந்த பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. அவரைப் பாராட்டும்விதமாக இதை நான் செய்துள்ளேன்" எனக் கூறியுள்ளார். இத்துடன் இவரின் பாக் ஸ்டார் நிறுவனத்தில் அஞ்சுவுக்கு வேலையும் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டுள்ளதாம்.
இவற்றை பாகிஸ்தானை சேர்ந்த குலாம் அப்பாஸ் ஷா என்ற பத்திரிகையாளர் ட்விட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அங்குள்ள மோசின் கான், “யாராவது புதிய இடத்திற்கு வந்தால், அவர்களுக்கு வீட்டுவசதிதான் முக்கியப் பிரச்னையாக இருக்கும். ஆதலால், அவர்களை இங்கேயே தங்க வைக்கலாம் என்று நினைத்தோம். அதற்காகவே அந்த இடத்தை அவரது பெயரில் கொடுத்தோம். மேலும் ஃபாத்திமா (அஞ்சு) எந்த பிரச்னையையும் எதிர்கொண்டதாக உணரக்கூடாது என்பதற்காக வேறு பரிசுகளையும் வழங்கினோம். இதை அவர் தன் வீடாக நினைத்துக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
இவர்களுடைய காதல் கதை இணையத்தில் தீயாய்ப் பரவி வரும் நிலையில், இன்னொரு எல்லை தாண்டிய கதையும் வைரலாகி வருகிறது. அதன்படி இலங்கையை சேர்ந்த விக்னேஸ்வரி என்பவர், ஆந்திராவைச் சேர்ந்த லட்சுமணனுடன் முகநூல் மூலமாகப் பழக்கமாகி இருக்கிறார். நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. கடந்த 6 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். இதையடுத்து, லட்சுமணனை திருமணம் செய்வதற்காகச் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தார், விக்னேஸ்வரி. பின்னர் லட்சுமணன், அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

இவர்களுடைய காதலை குடும்பத்தினர்கள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இதற்கிடையே, விக்னேஸ்வரியின் விசா வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே, அதற்குள் விக்னேஸ்வரி நாட்டைவிட்டு வெளியேறுமாறு போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். மேலும், இந்த திருமணத்தை இலங்கையில் உள்ள விக்னேஸ்வரியின் பெற்றோருக்கு தெரிவித்து சட்டப்பூர்வமாக பதிவு செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.