’முக்கிய புள்ளி’|இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் போர் காலத் தலைமைத் தளபதி மரணம்! யார் இந்த அலி ஷாத்மானி?
இஸ்ரேல் - ஈரான் மாறிமாறி தாக்குதல்!
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13 முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அங்கு நாளுக்கு நாள் போர்ப் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்த தாகுதலில் ஈரானின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, அமெரிக்கா தெஹ்ரானில் உள்ள பொதுமக்களை விரைவில் வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. (தெஹ்ரானில் சுமார் 9.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். முன்னதாக, இஸ்ரேலிய இராணுவம் மத்திய தெஹ்ரானின் ஒரு பகுதியில் உள்ள 330,000 மக்களை வெளியேற்றும் எச்சரிக்கையை விடுத்தது, இதில் நாட்டின் அரசு தொலைக்காட்சி மற்றும் காவல்துறை தலைமையகம் அடங்கும்). இதனால் அங்கு இன்னும் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பப்படுகிறது. மறுபுறம், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு மத்தியில், தெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் நகரத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 110 பேர் தூதரகம் செய்த ஏற்பாடுகள் மூலம் எல்லையைக் கடந்து ஆர்மீனியாவிற்குள் நுழைந்தனர்
இந்த நிலையில், நேற்று இரவு நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் உயர்மட்ட இராணுவத் தளபதியும், போர் காலத் தலைமைத் தளபதி என அழைக்கப்பட்டவருமான அலி ஷாத்மானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இவர் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிக நெருக்கமான நபர் என்று அது தெரிவித்துள்ளது. இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் ஈரானிய ஆயுதப் படைகள் இரண்டிற்கும் ஷாட்மானி தலைமை தாங்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் ராணுவம் இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை.
யார் இந்த அலி ஷாத்மானி?
அலி ஷாத்மானி ஈரானிய ஆட்சியின் உயர் இராணுவத் தளபதியாக இருந்தார். மேலும் அவர், ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி என அழைக்கப்பட்டார். அலி ஷாத்மானி ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமான நபர் என்று ஐ.டி.எஃப் தெரிவிக்கிறது. மேலும், ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகவும் அலி ஷாத்மானி பணியாற்றியுள்ளார். மேலும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய இராணுவம் இரண்டையும் தனது கட்டளையின் கீழ் வைத்திருந்ததாக IDF தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தொடங்கிய இந்த நடவடிக்கையின் தொடக்கத்தில், அவரது முன்னோடியான அலா அலி ரஷீத், கொல்லப்பட்ட பிறகு, ஈரானிய ஆயுதப் படைகளுக்குத் தலைமை தாங்க அலி ஷாத்மானி நியமிக்கப்பட்டுள்ளார். அலி ரஷீத்துக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, ஷாத்மானி 'கத்தாம் அல்-அன்பியா' எனும் அவசர கட்டளை மையத்தின் துணைத் தளபதியாகவும், ஈரானிய ஆயுதப் படைகளின் பொதுப் பணியாளர் மன்றத்தில் செயல்பாட்டு இயக்குநரகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். ஈரானின் அவசரகால கட்டளை மையமான 'கத்தாம் அல்-அன்பியா', போர் நடவடிக்கைகளை நிர்வகிப்பதற்கும் ஈரானின் துப்பாக்கிச் சூடு திட்டங்களை அங்கீகரிப்பதற்கும் பொறுப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.