ஈரான் டிவி சேனல் மீது இஸ்ரேல் தாக்குதல்... உயிர் தப்பிய பெண் செய்தி வாசிப்பாளர்!
தலைநகர் தெஹ்ரானில் செயல்பட்டு வரும் இந்த ஸ்டூடியோவில், செய்தி வாசிப்பாளர் நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தப்பட்டதும் நிலைதடுமாறி, செய்தி வாசிப்பாளர் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடிச் செல்லும் காட்சிகள் வெளியாகி காண்போரை பதற்றத்தில் ஆற்றியுள்ளது.
இஸ்ரேல் படைகளின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஸ்டூடியோ அமைந்துள்ள பகுதி, புகை மண்டலமாக காட்சி அளித்தது.
முன்னதாக, அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டுவதாகக் கூறி அந்நாட்டின் அணு உலைகள் மீது இஸ்ரேல் வியாழக்கிழமை இரவு தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் தீவிரத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இரு நாடுகளிடையே 4 ஆவது நாளாக மோதல் நீடித்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் இந்தியர்கள் இன்று மாலைக்குள் வெளியேறும்படி இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் நடக்கும் மோதல்கள், இரு நாடுகளுக்கும் கவலை தருவதாக தெரிவித்தார். இந்த மோதல்களால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களால், அண்டை பிராந்தியங்களும் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும், இது போருக்கான காலம் இது கிடையாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.