நெருங்கிய நட்பு, எதிரியாக மாறியது எப்படி? அமெரிக்கா - ஈரான் இடையே நடப்பது என்ன? - வரலாற்றுப் பார்வை
நட்புடன் வழங்கிய ஈரான் - அமெரிக்கா
20ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில் ஈரானும் அமெரிக்காவும் நல்ல நண்பர்களாக இருந்தன. அப்போது மத்திய கிழக்கு நாடுகளில் சோவியத்தின் எண்ணெய் வளமும் புகழ்பெறத் தொடங்கியது. இதைத் தடுக்க அமெரிக்கா ஈரானின் அப்போதைய ஆட்சியாளர் ஷாவை நம்பியிருந்தது. ஆனால் உள்நாட்டில் 1950 முதல் தொடங்கிய பனிப்போரால் ஷா செல்வாக்கை இழந்தார். இதற்கிடையே மெதுவாய்க் கனன்று கொண்டிருந்த இந்தப் பனிப்போர், 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியாக வெளிப்பட்டது. அமெரிக்காவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய ஷாவை, ஈரானியர்களே வீழ்த்தினர்.
அமெரிக்க தூதரகத்தைக் கைப்பற்றி, அதன் ஊழியர்களையும் சிறைப்பிடித்தனர். அதுமுதல் அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவிலும் விரிசல் விழத் தொடங்கியது. அதேநேரத்தில், புதிய அரசாங்கம் ஈரானில் இஸ்லாமிய புரட்சியை விதைத்தது. அது, தனது சக ஷியா முஸ்லிம்களுக்கும் இஸ்ரேலை எதிர்க்கும் குழுக்களுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது. இதையடுத்து 1980களின் முற்பகுதியில் லெபனானில் ஹிஸ்புல்லாவை அமைத்தது. இது, அமெரிக்காவின் மிகவும் நட்பு நாடான இஸ்ரேல் மீது அடிக்கடி போர் தொடுத்தது. இதனால், அமெரிக்காவின் கவனம் ஈரான் மீது திரும்பியது. தொடர்ந்து 2000ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்து ஜார்ஜ் டபிள்யூ புஷ், ஈரானை தீவிரவாத நாடு என அழைக்க அது மேலும் மோதலை அதிகரித்தது. இந்த நிலையில், ஈரானின் ரகசிய அணுசக்தி திட்டம் 2002இல் வெளியிடப்பட்டது. இதுதான் தற்போது வரை இரு நாடுகளையும் எதிரெதிர் பக்கங்களில் வைத்துள்ளது.
மத்திய கிழக்கில் போட்டி
ஈரான் அணு ஆயுத பலம் பெற்றால், இஸ்ரேலுக்கும், தங்களுக்கும் அது மிகப் பெரிய அச்சுறுத்தல் என்பதை உணர்ந்து அமெரிக்காவும், பிற வல்லரசு நாடுகளும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. மறுபுறம், மத்திய கிழக்கைச் சுற்றியுள்ள இரு தரப்பினரின் பிரதிநிதிகளுக்கும் நட்பு நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் மற்றும் அரசியல் போராட்டங்களில் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில்தான் நெடுநாட்களாக நீடித்து வரும் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேல் போரில், ஈரான் அரசு ஏமனின் ஹவுதி, தெஹ்ரானின் ஹிஸ்புல்லா, காஸாவின் ஹமாஸ் அமைப்புகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த அமைப்புகள் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளால் பயங்கரவாத அமைப்புகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளன. எனினும், இந்த அமைப்புகளுக்கு ஈரான் அரசு நிதியுதவியும் ஆயுத உதவியும் வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே, ஈரானுடன் நெருங்கிய உறவுடன் இருக்கும் அண்டை நாடுகளும் ஒருவித அச்சத்திலேயே உள்ளன. ஈரான் மீதான எந்தவொரு அமெரிக்கத் தாக்குதலும் தங்களுக்கு எதிராகப் பழிவாங்கலைத் தூண்டக்கூடும் என்று அவை அஞ்சுகின்றன.
பின்னணியில் இருக்கும் காரணம் என்ன?
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், ஈரான் அரசை தொடர்ந்து சீண்டி வருகிறார். அதாவது, தங்கள் நாட்டில் அதிகம் கிடைக்கும் யுரேனியத்தை வைத்து குறைந்த சில நாட்களிலேயே அணு ஆயுதங்களை ஈரானால் தயாரிக்க முடியும். இது, தமக்கும், அமெரிக்காவுக்கும் ஆபத்தாக முடியும் என இஸ்ரேல் உளவுத் துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில், அணு ஆயுதம் தயாரிக்க முடியாத அளவுக்கு ஈரானுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் வலியுறுத்தி வருகிறது.
இதைத் தொடர்ந்தே ட்ரம்ப், இதுதொடர்பாக ஈரானை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருகிறது. ஆனால், ஈரானோ அமெரிக்காவின் அழைப்பை அலட்சியப்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான், சமீபத்தில் இஸ்ரேல் ஈரானின் அணு ஆயுத உலைகள் மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதில், அமெரிக்காவின் பங்கும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அச்சம் நிலவுகிறது. மறுபுறம், இந்தத் தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுக்கும் என நம்பப்படுகிறது.