ஈரான் போர் | 16 நாடுகள் பாதிப்பு.. இஸ்ரேலுக்கு வாரத்துக்கு ரூ.27 ஆயிரம் கோடி இழப்பு!
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாத நிலையில், இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் தாக்குதலைத் தொடுத்தன. இந்த தாக்குதலில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஈரானை ஆட்சி புரிந்துவந்த அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இது, உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தின. தற்போது அஜர்பைஜான் நாட்டின் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. தவிர, தாக்குதல் மேலும் தீவிரமடையும் எனவும், நீண்ட நாட்கள் தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அமெரிக்கா - ஈரான் இடையிலான தீவிர போரால் உலகம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 16 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஈரான், இஸ்ரேல், லெபனான், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பஹ்ரைன், சவுதி, கத்தார், இலங்கை, சிரியா, ஈராக், ஜோர்டன், எகிப்து, சைப்ரஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களில் ஈரானில் மட்டும் 1,230 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 87 பேரும், லெபனானில் நடைபெற்ற தாக்குதல்களில் 72 பேரும்உயிரிழந்துள்ளனர். மேற்கண்ட 16 நாடுகள் தவிர, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கச்சா எண்ணெய் விநியோகமும் சீர்குலைந்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடியும் உருவாகியுள்ளது.
இன்னொரு புறம்,லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் தெற்குப் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்திவருகிறது. கடந்த மார்ச் 2 முதல் ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளைக் குறிவைத்து நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களால் பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் கடும்புகை மூட்டமாகக் காணப்படுகின்றன. இஸ்ரேலிய தரைப்படை டாங்கிகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்துள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கு வாரத்துக்கு 27ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு
அதேநேரத்தில், ஈரானுடன் நடைபெற்று வரும் போர் தொடர்ந்தால், வாரத்துக்கு 27ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று இஸ்ரேல் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. போரால், இஸ்ரேலில் பல இடங்களில் வேலைக்குச் செல்லவும், அலுவலகங்கள், கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேநிலை தொடர்ந்தால், அலுவலகங்கள் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டியிருக்கும். இதனால் அரசின் பட்ஜெட் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் என்று இஸ்ரேல் நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது.

