
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்கும் முதற்கட்ட பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் எனவும், ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் இல்லம் நினைவிடமாக்கப்படும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து போயஸ் தோட்டத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. முதலமைச்சரின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஜெயலலிதாவின் வீடு நினைவு இல்லமாக மாற்றப்படுவதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் முதலமைச்சர் அறிவிப்புக்கு ஏற்றபடி போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க முதற்கட்ட பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக வேதா இல்லத்தில் அளவெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து மற்ற பணிகளை அடுத்தடுத்து நடைபெறும் எனவும் அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.