இலக்கை அடைந்த ஆதித்யா விண்கலம்.. 4வது நாடாக இணைந்த இந்தியா.. விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!

சூரியனை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்.1 புள்ளியை அடைந்துள்ளது.
ஆதித்யா விண்கலம்
ஆதித்யா விண்கலம் ட்விட்டர்

செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி - சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு (2023) செப்டம்பர் 2-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும். அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்படவுள்ள ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

ஏறத்தாழ 127 நாட்கள்... பலகட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் திட்டமிட்ட இலக்கான எல்.1 புள்ளியை அடைந்துள்ளது.

சூரியனை ஆய்வுசெய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் எல்.1 புள்ளியைச் சென்றடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப் பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கி.மீ. தொலைவிலுள்ள எல்.1 புள்ளியைத் தற்போது அடைந்துள்ளது

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள், “சூரியனின் செயல்பாடுகளையும், வானிலையில் அது ஏற்படுத்தும் தாக்கத்தையும் ஆதித்யா எல்-1 விண்கலம் ஆய்வு செய்யும். விண்கலத்தில் உள்ள 7 சாதனங்கள், இந்த ஆய்வில் ஈடுபடும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: கதை அல்ல நிஜம்: குழந்தையின் தங்க செயின், வளையலை திருடிய காகம்.. கேரளாவில் நடந்த சுவாரஸ்யம்!

இந்தியா மீண்டும் சாதித்தது குறித்து பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ”மனிதகுலத்துக்கு பலனளிக்கும் புதிய அறிவியல் எல்லைகளை அடைவதற்கு இந்தியா தொடர்ந்து பணியாற்றும். விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்கான சான்று இது. புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா. இந்த அசாதாரண... சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடிPT

சூரியனை ஆய்வு செய்ய இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் விண்கலங்களை அனுப்பி உள்ளன. அந்த வரிசையில் இந்தியா 4வது நாடாக இணைந்துள்ளது.

இதையும் படிக்க: நடுவானில் பறந்த விமானத்திலிருந்து பெயர்ந்து விழுந்த கதவு.. அச்சத்தில் பயணிகள்.. வைரல் வீடியோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com