கதை அல்ல நிஜம்: குழந்தையின் தங்க செயின், வளையலை திருடிய காகம்.. கேரளாவில் நடந்த சுவாரஸ்யம்!

கேரளாவில் காகம் ஒன்று குழந்தையின் தங்க செயின் மற்றும் வளையல்களைத் திருடிச் சென்று தென்னை மரத்தின் கூட்டில் வைத்த சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தங்க வளையல், காகம்
தங்க வளையல், காகம்ட்விட்டர்

அன்று பலரும் தங்களது குழந்தைகளுக்கு சிறுசிறு கதைகளைச் சொல்லி மகிழ்விப்பர். அதில் ஒரு கதையாக, காகம் நகையைத் திருடிச் சென்ற கதையொன்று சொல்லப்படும். அதாவது, மரம் ஒன்றில் பெண் காகம் கூடுகட்டி முட்டையிட்டு வந்தது. இந்த நிலையில், அம்மரத்திற்குக் கீழேயே பாம்பு ஒன்று இருந்தது. அந்தப் பாம்பு மரத்தில் ஊர்ந்து சென்று பெண் காகம் இடும் அனைத்து முட்டைகளையும் சாப்பிட்டது. இதனால், அந்தப் பெண் காகம் பெரும் ஏமாற்றமடைந்தது.

ஒருகட்டத்தில் இதற்கு முடிவுகட்ட நரியிடம் சென்று ஆலோசனை கேட்டது, காகம். நரியும் சொன்னது. அதாவது ‘ஒருநாள் நம் நாட்டின் அரசி, தன் நகைகளைக் கழட்டிவைத்துக் குளித்துக் கொண்டிருக்கும்போது, அந்த நகைகளைத் திருடிச் சென்று பாம்பு இருந்த துளைக்குள் போட்டுவிடு. இதைப் பார்த்த அரண்மனை காவலர்கள், பாம்பை அடித்துக் கொன்று நகையை மீட்டுவிடுவர்’ என்றதாம் நரி. காகமும் அதேபோல செய்து, பாம்பின் கதையை முடித்துவிட்டதாக கதையில் சொல்லப்பட்டிருக்கும்.

இதேபோன்ற ஒரு நிகழ்வு கேரளாவில் தற்போது நிஜமாகவே நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு கண்ணன்கடவு பகுதியைச் சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி ஷரீபா. இந்த தம்பதிக்கு பாத்திமா ஹைபா என்ற மகள் உள்ளார். பாத்திமா அங்குள்ள பள்ளி ஒன்றில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஷரீபாவின் உறவினர் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஷரீபா தன் மகள் பாத்திமாவுடன் பங்கேற்றுள்ளார். திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றபோது மகள் பாத்திமாவுக்கு தங்க செயின் மற்றும் 2 தங்க வளையல்களை அணிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நியூசிலாந்து: நாடாளுமன்ற அவையை அதிரவிட்ட இளம் பெண் எம்.பி.... வைரல் வீடியோ!

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருவரும் வீடு திரும்பிய நிலையில் தங்க செயின் மற்றும் வளையல்களை சிறுமி கழற்றி பேப்பர் ஒன்றில் சுற்றி கூடைப்பையில் வைத்துள்ளார். நகைகளை கூடைப்பையில் வைத்துள்ளதாகவும் அதைப் பத்திரமாக எடுத்து வைக்கும்படியும் பாத்திமா, தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், மகள் கூறியதை தாயார் ஷரீபா மறந்துள்ளார். இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஷரீபா தனது மகளுடன் உறவினர் வீட்டிற்குச் செல்லப் புறப்பட்டுள்ளார். அப்போது மகளுக்கு நகைகளை அணிவிக்க எண்ணிய ஷரீபா செயின், வளையலை தேடியுள்ளார். அப்போது, மகள் கூறிய இடத்தில் நகைகள் இல்லை. பேப்பரில் மடித்து வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாததால் ஷரீபா அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக, உறவினர்களுடன் சேர்ந்து வீடு முழுவதும் நகைகளைத் தேடியுள்ளார். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தின் அடியில் குப்பைகளுக்கு நடுவே தங்க செயின் கிடந்துள்ளது. இதனால், ஆனந்தமடைந்த குடும்பத்தினர் தொடர்ந்து தென்னைமரத்தைச் சுற்றி தேடியுள்ளனர். அப்போது, தென்னை மரத்தில் கூடுகட்டியுள்ள காகம் பிளாஸ்டிக் வளையல், சிறு குச்சிகளை எடுத்துச்செல்வதைப் பக்கத்து வீட்டுக்காரர் பார்த்ததாக ஷரீபா வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ‘ஏறு தழுவுதல்’ ‘சல்லிக்கட்டு’: சங்க இலக்கியம் To நவீன நாவல்! தமிழர் வாழ்வில் ஜல்லிக்கட்டு கலாசாரம்!

இதனால், சந்தேகமடைந்த ஷரீபா, கணவர் நசீரை தென்னை மரத்தில் ஏறி காகத்தின் கூட்டில் சோதனை செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து, நசீர் தென்னை மரத்தில் தேடியுள்ளார். அப்போது சிறுமியின் தங்க வளையல் காகத்தின் கூட்டிற்குள் இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் எல்லோரும் சந்தோஷம் அடைந்தனர். தவிர, வேறு சில பொருட்களையும் அந்தக் காகம் தனது கூட்டுக்குள் வைத்திருப்பது தெரியவந்தது.

காணாமல் போன தங்க செயின், வளையலை காகம் எடுத்துச்சென்று தென்னை மரத்தில் உள்ள தன் கூட்டில் வைத்துள்ளது. கூட்டில் இருந்து செயின் மட்டும் கீழே விழுந்துள்ளது. அந்த கூட்டில் இன்னும் சில பிளாஸ்டிக் வளையல்களும் இருந்ததாக நசீர் தெரிவித்திருந்ததுடன், இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்கும்படி ஷரீபா குடும்பத்தையும் அக்கம்பக்கத்தினரையும் கேட்டுக் கொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com