Airtel, Jio பயனர்களுக்கு இனிப்பு செய்தி.. Voice Call-க்கு மட்டும் தனி ரீசார்ஜ்.. இனி கவலை வேண்டாம்!
பிரபல தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள், ரீச்சார்ஜ் திட்டங்களில் பெரிய அளவிலான மாற்றத்தை கொண்டு வந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு விலை உயர்வை அமல்படுத்திய செய்தி இடியை இறக்கினாலும், இப்போது வந்துள்ள செய்தி இனிப்பான செய்தியாகத்தான் அமைந்துள்ளது.
எங்களுக்கு எதுக்கு நெட் வசதி..
இந்தியாவில் பெரும்பாலானோர் செல்ஃபோன், ஸ்மார்ட் ஃபோன் யூசர்களாக மாறிவிட்டாலும், அதில் அனைவருமே டேட்டாவை பயன்படுத்துவதில்லை. எவ்வளவு டேட்டா போட்டாலும் பத்தவில்லையே என்று ஒரு தரப்பு புலம்ப, ‘எனக்கு எதுக்குங்க டேட்டா.. இந்த டேட்டா பேக் இல்லாம, செல்ஃபோன் மட்டும் பேசுறதுக்கு ப்ளானே இல்லையா’ என்று மற்றொரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். நடைமுறைப்படி பார்த்தால், மற்றவர்களோடு பேசுவதற்காக மட்டுமே பலர் செல்ஃபோனை பயன்படுத்துகின்றனர். அப்படி இருக்க, ஏர்டெல், ஜியோ, வோடாஃபோன் என்று எந்த நெட்வொர்க்கை தேர்வு செய்தாலும், டேட்டா இல்லாமல், வாய்ஸ் கால்ஸுக்காக மட்டும் தனி ப்ளான்கள் இல்லாமல் போனது பெரும் சிக்கலாக அமைந்தது. குறிப்பாக, கடந்த ஆண்டு விலை உயர்வை அமல்படுத்தியபோது, இருந்த ஓரிரு திட்டமும் நீக்கப்பட்டது. ஒரு நெட்வொர்க்கில் வாய்ஸ் கால்ஸ் மட்டும் பேச ரீச்சார்ஜ் செய்ய பார்த்தால், 2 அல்லது 4 ஜிபி டேட்டாவையும் கொடுத்து, அதற்கு கூடுதலாக கட்டணத்தையும் வசூலிப்பார்கள்.
இதனால், ‘தண்ணி கேன் போட வந்தேங்க.. எங்களுக்கு எதுக்கு டேட்டா.. அதுக்கு எதுக்கு எக்ஸ்ட்ரா பைசா’ என்று பலரும் புலம்பியதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில்தான், டேட்டாவை பயன்படுத்தாமல், வெறும் வாய்ஸ் கால்ஸ், SMS போன்ற சேவைகளுக்காக, ரீச்சார்ஜ் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI கடந்த டிசம்பர் 23ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில்தான், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், வாய்ஸ் கால்ஸ் மற்றும் SMS சேவைகளை மட்டுமே பயன்படுத்தும் வகையில் புது திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.
வாய்ஸ் கால்களுக்காக பிரத்யேக ரீசார்ஜ் திட்டம்..
அதன்படி ஜியோ நிறுவனம், 458, 1,958 ரூபாய்களில் இரு திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
ஜியோ Rs.458 ரீசார்ஜ் - 458 ரூபாயில் ரீச்சார்ஜ் செய்தால், அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ், 1000 sms சேவைகள் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும்.
ஜியோ Rs.1,958 ரீசார்ஜ் – 1,958 ரூபாய்க்கான திட்டம் என்று பார்த்தால், ஒரு வருடம் முழுவதும் அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ், 3,600 SMS ஆகிய சேவைகள் கிடைக்கும்.
இதேபோல், ஏர்டெல் நிறுவனமும் 509, 1,999 ரூபாய்களில் 2 திட்டங்களை கொண்டுவந்துள்ளது.
ஏர்டெல் Rs.509 ரீசார்ஜ் - 509 ரூபாய்க்கான திட்டத்தில் ரீச்சார்ஜ் செய்தால், அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ், 900 sms சேவைகள் கிடைக்கும். இதன் வேலிடிட்டி 84 நாட்களாகும்.
ஏர்டெல் Rs.1,999 ரீசார்ஜ் – 1,999 ரூபாய்க்கான திட்டம் என்று பார்த்தால், வருடம் முழுவதும் அன்லிமிடட் வாய்ஸ் கால்ஸ், 3,600 sms வசதிகள் கிடைக்கும். ஆக, ‘எனக்கு டேட்டாவே வேணாம்.. வாய்ஸ் கால் பேசினா போதும்’ என்று கேட்கும் பயனர்களுக்கு அசத்தல் திட்டங்களாக இவை அமைந்துள்ளன.