இனி 3 நிமிடம் வரை ரீல்ஸ்.. இன்ஸ்டாகிராம் தந்த புது அப்டேட்!
இன்றைய உலகம் இணையதளத்துக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அதன் வாயிலாக புதுப்புது தளங்களும், செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பயனர்களுக்கு அதிகளவு பயன்களை அள்ளித் தருவதுடன், புதுப்புது வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது.
அந்த வகையில் இன்ஸ்டாகிராம் செயலி, இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது. தவிர, அவர்களுடைய திறமைகளையும் உலகம் முழுவதும் வெளிப்படுத்தி வருகிறது.
குறிப்பாக, உலகின் முன்னணி சமூக வலைதள செயலிகளில் ஒன்றாக விளங்கும் இன்ஸ்டாகிராமில், பயனர்கள் பலரும் தங்களுடைய ரீல்ஸ்களைப் பதிவிட்டு லைக்குகளைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் இனி 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்ற புதிய அப்டேட்டை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம் தலைவர் மொசெரி வெளியிட்டுள்ள பதிவில், ”யூடியூப் ஷார்ட்ஸைப் போலவே இன்ஸ்டாவில் 3 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பயனர்கள் பதிவேற்றலாம்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 90 விநாடிகள் வரையிலான ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொள்ளும் வசதி இருந்தது.
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் ஒரேநேரத்தில் பதிவிட முடியும் புகைப்படங்களின் எண்ணிக்கையை 10இல் இருந்து 20 ஆக மெட்டா நிறுவனம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.