கரூர் துயரம்| நீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து.. யூடியூபர் மாரிதாஸ் கைது!
கரூர் துயரச்சம்பவம் குறித்த வழக்கில் தவெக கட்சி மீதும், தலைவர் விஜய் மீதும் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. அதுப்பற்றி தன்னுடைய எக்ஸ்தளத்தில் விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி என்று பதிவிட்டிருந்தார் யூடியூபர் மாரிதாஸ்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மறுபக்கம், இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தவெகவினரையும், அவர்களின் தலைவர் விஜயையும் கடுமையாக சாடியிருந்தார்.
இந்த சூழலில் நீதிமன்றத்தில் விஜய்க்கு நடந்தது அநீதி என்று யூடியூபர் மாரிதாஸ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்ததை தொடர்ந்து, நீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக மாரிதாஸ் இன்று சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்து விடுவிப்பு..
நீதிமன்ற விசாரணை குறித்து எக்ஸ்தளத்தில் பதிவிட்டிருந்த மாரிதாஸ், ”விஜய் கரூர் நடந்த சம்பவத்திற்கு நானே கடுமையாக எதிர்த்து பேசியுள்ளேன் , அவர் தரப்பு நிர்வாகிகள் தவறை எடுத்து பேசியுள்ளோம். ஆனால் நேற்று நடந்தது ஒரு பெரிய நாடகம். விஜய்க்கு நீதிமன்றத்தில் நடந்தது அநீதி” என பதிவிட்டிருந்தார்.
இந்தசூழலில் நீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, தென் மண்டல சைபர் கிரைம் போலீஸார் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து அவரை கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணைக்கு பிறகு சம்மன் அளித்து மறுவிசாரணைக்கு வருமாறு அனுப்பி வைக்கப்பட்டார்.