’என்ன மாதிரியான கட்சி இது? தலைவரின் மனநிலையை காட்டுகிறது’ - தவெகவை விளாசிய உயர்நீதிமன்றம்
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில், கூட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெஞ்சைவிட்டு அகலாத இந்த துயரச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறை தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மறுபக்கம், இந்த விவகாரத்தில், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
தவெக பொதுச் செயலர் ஆனந்த், இணை பொதுச் செயலர் நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனு, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றவேண்டும், அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதிய விதிகளை வகுக்க வேண்டும் உள்ளிட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்றது..
சிபிஐக்கு மாற்ற வேண்டுமா?
முதலில் கரூர் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மனுவிற்கு அரசுத்தரப்பு மறுப்பு தெரிவித்தது.
கட்சி கூட்டங்கள் மாநில சாலை அல்லது தேசிய சாலையில் நடத்தப்பட்டதா? என்ற கேள்வியை எழுப்பிய நீதிமன்றம், "கரூரில் கூட்டம் நடந்தது மாநில சாலையா? அல்லது தேசிய நெடுஞ்சாலையா? எப்படி அனுமதி வழங்கினீர்கள். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் நலனே முக்கியம். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டியது அவசியம்" எனத் தெரிவித்தது
அரசுத்தரப்பில், "கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது தேசிய நெடுஞ்சாலை அல்ல, கூட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடத்தில், சாலையின் வடக்கேதான் அனுமதி வழங்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள் நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் எனத் தெரிவித்தனர். மேலும், தவெக தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், "ஏற்கனவே கூட்டநெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் திருப்தியில்லை என்றால்தான் விசாரணையை மாற்றக்கோரலாம். விசாரணையின் தொடக்க நிலையிலேயே எப்படி விசாரணையை மாற்றும்படி கேட்க முடியும்?" என கேள்வியை எழுப்பி சிபிஐ-க்கு மாற்ற வேண்டிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
தொடர்ந்து அரசின் கடமையை உணர்த்திய நீதிமன்றம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிலையை எண்ணிப்பாருங்கள். யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா? குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும். பொதுமக்களின் நலனே பிரதானம். குடிமக்கள் எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். அரசின் பாதுகாப்பு அமைப்பு முறையாக செயல்பட வேண்டும். பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை என நீதிபதிகள் தெரிவித்தனர்
முன் ஜாமீன் வழங்க மறுப்பு
தவெக தலைவர் விஜய் பரப்புரையில் நாமக்கல் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், த.வெ.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் சதீஷ்குமாருக்கு முன் ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இதுகுறித்து எதிர்ப்பரை தெரிவித்த நீதிமன்றம், "கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?" என கேள்வி எழுப்பியது.
காவல்துறை தரப்பில், "த.வெ.க.வினர் செயல்பாடுகளால் 5 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர் மீது மேலும் எட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன" என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த மனுவில் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஆனந்த் மீதான வழக்கின் தீர்ப்பில் என்ன நடந்தது?
தவெக பொதுச் செயலர் ஆனந்த், இணை பொதுச் செயலர் நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனு மீதான வாதத்தில், "கரூரில் ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கோருவது எதனால்? உரிய பாதுகாப்பை வழங்குவதற்கு தான். கூட்டங்களை மேலாண்மை செய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க அரசுக்கே உள்ளது. மக்கள் அதிகமாக வருவர் என போலீஸ் கணித்திருக்க வேண்டும், நாங்கள் அதில் புலமை பெற்றவர்கள் அல்ல. வேலுச்சாமிபுரம் குறுகிய சாலை எனில் போலீஸார் அனுமதி மறுத்திருக்கலாமே. வேலுச்சாமிபுரத்தை பற்றி எங்களுக்கு தெரியவில்லை.
4 மணி நேரம் எங்கள் தலைவர் தாமதமாக வந்தார். 3 மணிக்கு வருவதாக சொன்னவர், 7 மணிக்கு வந்தது கிரிமினல் குற்றமா? மொத்த வழக்கும் அரசுத்தரப்பால் திரிக்கப்பட்டுள்ளது. தொண்டர்களை கொல்லவேண்டுமென்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. இது திட்டமிடப்பட்ட செயல் அல்ல. ஒரு விபத்தை கொலையாக மாற்றக்கூடா"து என ஆனந்த், நிர்மல்குமார் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள், "நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக உங்களுக்கு பொதுமக்கள் மீது எதாவது பொறுப்பு இருக்கிறதா இல்லையா?" என கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு, "ஆனந்த் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இல்லை. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் கைது செய்யப்பட்டுவிட்டார். ஒருவேளை இதுபோன்ற நிகழ்வு திமுக கூட்டத்தில் நடந்திருந்தால், செயலாளர் கைது செய்யப்படுவாரா? காவல்துறையினர் தடியடி நடத்தும் வரை நிகழ்வு ஒழுங்காக நடத்தப்பட்டது. அப்படியிருக்கையில் மொத்த பிரச்னையையும் என்மீது மாற்றுவது ஏன்?" என தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
"எங்கள் கேள்வியெல்லாம், கூட்டம் அதிகமாகிறது எனக்கூறி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை அணுகி ‘பரப்புரையை ரத்து செய்துவிட்டு செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. அதை சொல்லாதவர்கள்தான் பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள். அதைவிடுத்து அவர்கள் கட்சி மீது பழி சொல்லக்கூடாது" எனவும் வாதம் வைக்கப்பட்டது. அரசுத்தரப்பில் தேவையற்ற வாதங்களை அவர்கள் முன்வைக்கிறார்கள் என கூறப்பட்டது. இந்நிலையில் இருவரின் ஜாமீன் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
தவெக கட்சியை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்..
சென்னை உயர்நீதிமன்றத்தில் மற்றொரு மனு மீதான வாதத்தில் நீதிபதிகள் தவெக கட்சி மற்றும் தலைவர், நிர்வாகிகளை கடுமையாக சாடினர்.
நீதிபதிகள் பேசிய போது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? விஜயின் பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டுமா? நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. விஜயின் பரப்புரை வாகனம் மீது ஏன் ஹிட் அண்ட் ரன் வழக்குப்பதிவு செய்யவில்லை?. கரூர் துயரம், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு. விபத்து தொடர்பான வீடியோக்களை பார்த்து வேதனையடைந்தேன்.
சம்பவ இடத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் இறந்து கிடந்தபோதும், தவெக நிர்வாகிகள் தப்பியோடிவிட்டனர். என்ன மாதிரியான கட்சி இது. சம்பவம் நடந்தவுடன் பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் தொண்டர்களையும் தங்களை பின்தொடர்பவர்களையும் கைவிட்டு சென்றுவிட்டனர். அக்கட்சித் தலைவருக்கு தலைமைத்துவ பண்பே இல்லை.
ஒரு அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாக கண்டிக்கிறது; சம்பவத்திற்காக வருத்தம் கூட தெரிவிக்காததே கட்சித் தலைவரின் மனநிலையை காட்டுகிறது" என கடுமையாக சாடினர்.
கலவரைத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜுனா மீது தொடரப்பட்ட வழக்கில் கருத்து தெரிவித்த நீதிபதி, இவர்கள் என்ன சட்டத்திற்கு அப்பாற்பட்டவரா. ஏன் இவர் மீது காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப்பதிவின் பின்னணி என்ன என்பதை ஆராய்ந்து வழக்குப்பதிவுசெய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என காட்டமாக தெரிவித்தார்.