விருதுநகர் | ராட்டினத்தில் இருந்து விழுந்த இளம்பெண்.. பதைபதைக்க வைக்கும் காட்சி; அலறிய கூட்டம்..!
சுழன்றுகொண்டிருந்த ராட்டினத்தில் இருந்து இளம்பெண் ஒருவர் தவறி விழுந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து காயமடைந்த மாணவி 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
விருதுநகர் டூ மதுரை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கோடை விடுமுறை மற்றும் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி 77-வது பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. பொருட்காட்சியை காண விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், குடும்பம் குடும்பமாக சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சுழலும் ராட்டினத்தில் அமர்ந்திருந்த இளம் பெண் ஒருவர் திடீரென நிலைதடுமாறியிருக்கிறார். ராட்டினம் சுழலத்துவங்கியபோதே இளம்பெண்ணின் பிடி தளர்ந்த நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். ராட்டினம் சுழன்றுகொண்டிருந்தபோதே அதன் மேல் அடித்து, பின்னர் கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டது.
விபத்து நடந்த உடனே 108 ஆம்புலன்ஸ் மூலமாக காயமடைந்த அப்பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ராட்டினத்தில் இருந்து இளம் பெண் தவறி கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்திலும் வைரலாகியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் குறித்து விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.