பாஜக உடன் கூட்டணி | ”அதிமுகவுக்கும், தமிழ்நாட்டிற்கும் இபிஎஸ் செய்த துரோகம்” - திமுக எம்.பி கனிமொழி!
உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகம் வருகை அரசியலில் முக்கியத்துவம் பெறும் எனக் கூறப்பட்டு வந்த சூழலில், 2026 சட்டப்பேரவை தேர்தலை அதிமுகவும், பாஜகவும் இணைந்தே சந்திக்கும் என அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேசமயம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திக்கவிருப்பதாகவும், கூட்டணி ஆட்சி என்ற தகவலையும் அமித் ஷா உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே கூட்டணி அமைக்க அதிமுக தரப்பில் இருந்த எந்த நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை நடந்து வரும் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது எனவும் தெரிவித்தார்.
கூட்டணியை அமித் ஷா உறுதிப்படுத்தினாலும், தேர்தல் சமயத்தில் தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்படுமெனவும் தெரிவித்தார். அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்த போது, அதிமுக தரப்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி மற்றும் பாஜக தரப்பில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தலைவராக தேர்வாகியுள்ள நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
இந்நிலையில், பாஜக உடன் கூட்டணி வைத்ததன் மூலம் தன்னுடைய சொந்த கட்சியான அதிமுகவுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துவிட்டதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக- பாஜக கூட்டணி அமைந்து இருக்கிறது. தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள்! பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது!
பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங்களையும் எதிர்ப்பதாக சொன்னஅதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமி அவர்கள், உள்துறை அமித்ஷாவுடன் ஒரே மேடையில் மெளனமாக அமர்ந்து, பாஜக – அதிமுக கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை இன்று பார்க்க முடிந்தது. அதிமுகவுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது.
பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறி வந்தார்கள். இந்த கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை பல முறை சுட்டிக் காட்டி இருந்தார்கள். அது இன்று உண்மை ஆகியிருக்கிறது. இது இன்று பட்டவர்த்தனமாக தெளிவாக தெரிய வந்திருக்கிறது. மக்களை வெகுநாள் ஏமாற்ற முடியாமல், கூட்டணியை இன்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்” என்றார்.
அதன்பின்பு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
கேள்வி: தமிழ்மொழிக்கு திமுக செய்ததை பட்டியலிட முடியுமா என உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்கிறாரே?
காசி தமிழ்சங்கம் நடத்துகிறோம் என தமிழுக்கு தாங்கள் செய்துள்ள மிகப் பெரிய தொண்டு என சொல்கிறார்கள். தமிழ் மொழி மூலம் காசிக்கு செய்துள்ள நன்மையாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். இதனால் தமிழ் எப்படி வளரும் எனத் தெரியவில்லை!
சமஸ்கிருதத்துக்கு 2,400 கோடி ரூபாய் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி செலவு செய்கிறது. ஆனால் தமிழுக்கு 100 கோடி ரூபாய் கூட ஒதுக்குவதில்லை என முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இப்படி பாரபட்சமாக நடந்து கொள்ள கூடிய ஆட்சிதான் ஒன்றிய ஆட்சி.
தமிழ்நாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலா பள்ளிகளில், தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்களை அமைக்காத ஒன்றிய அரசு, தமிழுக்கு பெரிதாக என்னத் தொண்டு செய்து இருக்கிறது.
பிரதமர் மோடி அவர்கள் சில மேடைகளில் திருக்குறளை சொல்லுவதும் நிதி அமைச்சர் அவர்கள் திருக்குறளை மேற்கோள் காட்டுவதும் தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்தியை திணிப்பதைத்தான் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். மும்மொழி கொள்கை ஆக இருக்கட்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வஃக்பு திருத்தச் மசோதாவாக இருக்கட்டும், நீட் தேர்வாக இருக்கட்டும்; தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி நிறுத்தப்பட்ட நிலையாக இருக்கட்டும். இது அனைத்தையும் எதிர்த்து குரல் கொடுப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
சமீபத்தில் சிறுபான்மை மக்களுடன் தான் நிற்பதாக ஆணித் தரமாக பேசினார். இன்று வஃக்பு மசோதாவை நிறைவேற்றியவருடனே ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறார்.
மறைந்த அண்ணா, ஜெயலலிதா அவர்களை எல்லாம் தரக்குறைவாக விமர்சித்த தலைவருடன் ஓரே மேடையில் அமர்ந்து கொண்டு, கூட்டணியை யாரோ ஒருவர் அறிவிக்க அதைக் கேட்டுக் கொண்டு அமர வேண்டிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தள்ளப்பட்டு இருக்கிறார்.
வழக்கமாக யாரோடு தமைமையில் கூட்டணி அமைகிறதோ அவர் தான் கூட்டணியை அறிவிப்பார். ஆனால் இன்று எடப்பாடி பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்படுகிறது.
தங்களது தலைவர்களை விமர்சித்தவர்களையே இன்று வீட்டிற்கு விருந்துக்கு அழைக்க வேண்டிய நிலைக்கும் அவர் தள்ளப்பட்டு இருக்கிறார். இப்படி தனது கட்சிக்கும், தமிழ்நாடு மக்களுக்கு செய்து இருக்கக் கூடிய மிகப் பெரிய துரோகம் இது. வரும் தேர்தலில் இந்த கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள்.
தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் பாஜகவுக்கும், ஒன்றிய அரசுக்கும் இன்று அதிமுக ரத்தின கம்பளத்தை விரித்து இருக்கிறது. இது தான் தமிழ்நாட்டுக்கு அதிமுக செய்து இருக்கக் கூடிய மிகப்பெரிய துரோகம்.
கேள்வி: நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவுடன் கலந்து பேசி முடிவு எடுப்பதாக அமித்ஷா கூறுகிறாரே?
முன்பு அதிமுக ஆட்சியில் இருக்கும் போது கலந்து பேசி இருக்கலாமே,. இன்றாவது அறிவிக்க சொல்லுங்கள்.
கேள்வி: ஊழலை மறைக்கவே மும்மொழி கொள்கை விவகாரத்தை திமுக கையில் எடுத்து இருப்பதாக குற்றச்சாட்டு குறித்து?
ஒன்றிய பாஜக அரசு தான் மும்மொழி கொள்கையை கொண்டு வந்துள்ளனர். அதனை தான் நாம் எதிர்க்கிறோம். என்றுமே இந்தி திணிப்பை எதிர்க்கும் நிலையில், இரு மொழி கொள்கையை மட்டுமே ஏற்போம் என முதலமைச்சர் அவர்கள் கூறி இருக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள எதிர்கட்சி தலைவர்களை வருமான வரித்துறை அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை கொண்டு ஒடுக்குவதற்காக பயன்படுத்துகிறது ஒன்றிய அரசு.
யாரெல்லாம் எதிர்த்து பேசினாலும் இந்த நடவடிக்கை தொடர்கிறது. 95 சதவீதம் எதிர்கட்சி தலைவர்கள் மீதே அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு போடப்படுகிறது. ஆனால் குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது 2 சதவீதம் கூட கிடையாது. பாஜக பொய்யான வழக்குகளை தொடுப்பது இதன் மூலம் உறுதியாகிறது.
அதே பாணியில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நம்மையும் மிரட்டி விடலாம் என தப்புக் கணக்கு போடுகிறார்கள். தங்களது ஆட்சியில் செய்யும் தவறுகளை திசை திருப்பவே இது போன்ற வழக்குகளை அவர்கள் தொடுக்கிறார்கள்.