2026 தேர்தலை தீர்மானிக்கும் இளைஞர் பட்டாளம்.. இளைஞர்களை ஏன் எல்லா கட்சிகளும் குறிவைக்கின்றன?
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 19-லிருந்து 20 சதவீதம்வரை இளம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த இளம் தலைமுறை வாக்காளர்கள் பாரம்பரிய அரசியலைத் தாண்டி புதிய மாற்றங்களை எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்துப் பேசுவதற்கு முன் தமிழ்நாடு வாக்காளர்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் காணலாம்.
வயது வாரியாக வாக்காளர்களின் விழுக்காடு!
40லிருந்து 49 வயது வரையிலான வாக்காளர்கள் ஒரு கோடியே 15 லட்சத்து 89 ஆயிரத்து 951 பேர் ஆவார்கள். இது மொத்த எண்ணிக்கையில் 21.31விழுக்காடு ஆகும்.
50லிருந்து 59 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 697. இது ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 18 .68 விழுக்காடு ஆகும்.
60லிருந்து 69 வயது வரையிலான வாக்காளர்கள் 66 லட்சத்து 28 ஆயிரத்து 654 பேர் ஆவார்கள். ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 12.19 விழுக்காடு ஆகும்.
70லிருந்து 79 வயது வரையிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 33 லட்சத்து 73 ஆயிரத்து 573 ஆகும். இது, ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 6.2 விழுக்காடு ஆகும்.
80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை10 லட்சத்து 51 ஆயிரத்து 294 ஆகும். ஒட்டுமொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் இது 1.93 விழுக்காடு ஆகும்.
வாக்காளர்களின் சுமார் 40 சதவீதம் பேர் 40 வயதுக்கு உட்பட்டோர் எனும்போது இவர்களை ஈர்க்க எல்லா கட்சிகளும் பெரும் முயற்சி எடுக்கின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் நடிகர் விஜய்யின் வருகை, திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய சக்தியாக இளைஞர்களிடையே பார்க்கப்படுகிறது. சமூக ஊடகங்கள் மூலம் அவரது தாக்கம் மிக வலுவாக உள்ளது.
திமுகவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் 'இளைஞர் அணி மன்றம்' மற்றும் 234 தொகுதிகளிலும் 'கலைஞர் படிப்பகங்கள்' மூலம் இளைஞர்களை ஈர்க்கிறது. கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதிமுக மடிக்கணினி திட்டத்தின் முன்னோடி தாங்கள்தான் என்பதை முன்னிறுத்தி, வேலைவாய்ப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு போன்ற பிரச்சினைகளை முன்வைத்து மாணவர் அணி மூலம் போராட்டங்களை முன்னெடுக்கிறது.
நாதகவின் சீமான், பாஜகவின் அண்ணாமலை, பாமகவின் அன்புமணி ராமதாஸ் போன்றோரும் இளைஞர்களைக் கவரத் தனித்துவமான கொள்கைகளுடன் களம் இறங்கியுள்ளனர். 2026இல் தமிழ்நாட்டின் அரசியல் திசையைத் தீர்மானிக்கும் சக்தியாக இளைஞர் பட்டாளம் உருவெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

